சிரிலிய சவிய நிதி கணக்கில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, எதிர்வரும் தினமொன்றில் அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதுடன், லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவிற்கும் அவர் அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகளின்படி, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு CT ஸ்கேனர் இயந்திரம் வாங்கும் நோக்கில் தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து பெறப்பட்ட ஒரு கோடி ரூபாய் நிதி, சிரிலிய சவிய நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டு நிதி மோசடி இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இந்த இயந்திரம் சீன அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்ட போதிலும், வங்கியிலிருந்து பெறப்பட்ட இந்த நிதி வேறு நோக்கங்களுக்காக தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிரிலிய சவிய அமைப்பினால் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வ கோரிக்கைக்கு இணங்க, மருதானை மற்றும் சுதுவெல்ல கிளைகளில் பராமரிக்கப்பட்ட கணக்குகளுக்கு இந்த நிதி மாற்றப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், ஷிரந்தி ராஜபக்ஷ கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவசர இருதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். சத்திர சிகிச்சைக்குப் பிறகு அடுத்த சில வாரங்களுக்கு அவருக்கு முழுமையான படுக்கை ஓய்வு அத்தியாவசியம் என நிபுணத்துவ மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அவர் இவ்வாறு நோய்வாய்ப்பட்டிருந்த காரணத்தினால், சம்பந்தப்பட்ட விசாரணையை பின்னர் மேற்கொள்ள பொலிஸார் தீர்மானித்திருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலத்தில் பராமரிக்கப்பட்ட இந்த கணக்கில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டன. அரச வங்கியிலிருந்து பெறப்பட்ட 10 மில்லியன் ரூபாய் நிதிக்கு என்ன நடந்தது என்பது குறித்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் தலைமையில் ஏற்கனவே விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சிரிலிய சவிய கணக்கு தொடர்பில் பல சந்தேகத்திற்குரிய விடயங்கள் உள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் ஷிரந்தி ராஜபக்ஷவிடம் இதற்கு முன்னரும் நான்கு மணித்தியாலங்களுக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.