சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனமான ஃபிட்ச் (Fitch), இலங்கையின் நீண்டகால வெளிநாட்டு நாணயக் கடன் தரப்படுத்தலை 'CCC+' மட்டத்திலிருந்து 'B-' ஆக உயர்த்தியுள்ளதுடன், அதன் எதிர்காலக் கண்ணோட்டத்தை நிலையான மட்டத்தில் பேணுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. வெளிநாட்டு நிதியியல் அபாயங்களைக் குறைப்பதற்கு வழிவகுத்த கொள்கை ரீதியான நடவடிக்கைகள் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களின் அடிப்படையில் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பேரியல் பொருளாதார ஸ்திரப்படுத்தல் கொள்கைகள் மற்றும் கட்டமைப்பு திருத்தங்களை வெற்றிகரமாக அமுல்படுத்துவதன் மூலம், பொருளாதாரத்திற்கு ஏற்படும் வெளிநாட்டு அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் திறன் ஓரளவு கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக ஃபிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், தொடர்ந்து உயர் மட்டத்தில் உள்ள அரச கடன் தொகை, கடன் சேவை விகிதங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட வெளிநாட்டு நாணய கையிருப்பு ஆகியவை இலங்கையின் கடன் நிலைக்கு மேலும் தடையாக உள்ளன என்று அந்த நிறுவனம் எச்சரிக்கிறது.
தனக்குத் தேவையான அனைத்து எரிபொருளையும் இறக்குமதி செய்யும் இலங்கைக்கு, அமெரிக்கா-ஈரான் நெருக்கடியின் மத்தியில் உயரும் எரிசக்தி விலைகளும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மூன்று வருட உபரிக்குப் பிறகு, 2026 ஆம் ஆண்டில் நடப்புக் கணக்கு பற்றாக்குறைக்குச் செல்லவும் இது வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தொடர்ச்சியாக அதிகரித்து வரும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்கள் அந்த அழுத்தத்தை ஓரளவுக்குத் தணிக்க உதவும்.
இந்தத் தடைகள் இருந்தபோதிலும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி நிலையான மட்டத்தில் இருப்பதாக ஃபிட்ச் நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது. சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் பிற பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் நிதி உதவி, நடப்புக் கணக்கின் குறுகியகால அழுத்தங்களைக் குறைப்பதற்கு தொடர்ச்சியான வெளிநாட்டு ஆதரவை வழங்குகிறது என்றும் அது மேலும் குறிப்பிடுகிறது.