200 வருட சிறைத்தண்டனை பெற்ற இருவர் ஈஸ்டர் தாக்குதல் வெடிபொருள் களஞ்சியசாலையில் குற்றத்தையும் ஒப்புக்கொள்கின்றனர்

two-men-who-went-inside-for-200-years-also-admit-guilt-in-the-easter-bombings-explosives-warehouse

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட குழுவினரால் புத்தளம், வனாத்தவில்லு பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகளை களஞ்சியப்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு பிரதிவாதிகள் தமது குற்றத்தை ஒப்புக்கொள்ள தயாராக இருப்பதாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். நீர்கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அபு ஹனிஃபா மொஹமட் முஃபீட் மற்றும் அமீர் ஹம்சா மொஹமட் ஹமாஸ் ஆகிய பிரதிவாதிகள் தங்களுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர்.




இந்த வழக்கு லால் பண்டார (தலைவர்), ரஷ்மி சிங்கப்புலி மற்றும் நயோமி விக்ரமசேகர ஆகிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். குற்றத்தை ஒப்புக்கொள்ள தயாராக இருக்கும் இருவரைத் தவிர, ஈஸ்டர் தாக்குதலின் பிரதான வழக்கில் 200 ஆண்டுகளுக்கும் மேலான கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு பிரதிவாதிகளும் இந்த வழக்கில் ஏனைய பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். மொஹமட் சாரிக் ஆதம் லெப்பை, மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா, மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நௌஃபர் மற்றும் மொஹமட் ரமீஸ் மொஹமட் சாஜித் ஆகியோரே அந்த நான்கு பிரதிவாதிகள் ஆவர். இவர்கள் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த மற்ற இரண்டு பிரதிவாதிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

2018 ஆம் ஆண்டு அல்லது அதற்கு அண்மித்த காலப்பகுதியில் வனாத்தவில்லு லாக்டோஸ் தோட்டத்தில் நைட்ரேட் உள்ளிட்ட வெடிபொருட்கள், ஜெலக்னைட் குச்சிகள், துப்பாக்கிகள் அத்துடன் வெடிபொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நைட்ரிக் அமிலம் மற்றும் யூரியா ஆகியவற்றை சட்டவிரோதமாக சேகரித்து வைத்திருந்தமை தொடர்பில் சட்டமா அதிபரால் இவர்களுக்கு எதிராக 14 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. விடயங்களை ஆராய்ந்த மூவரடங்கிய நீதிபதிகள் குழாம், எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் இந்த வழக்கை தினசரி விசாரணைக்கு எடுக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து பிரதிவாதிகளின் நிலைப்பாட்டை அன்றைய தினம் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (05 ஆம் திகதி) மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளது.

Post a Comment

Previous Post Next Post