அரசாங்கத்தின் வரி கொள்கைகளுக்கும், வேகமாக அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கும் எதிராக மக்கள் போராட்ட இயக்கம் இன்று (03) கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதக் கூட்டத்தில் கலந்துகொண்ட குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீதிமன்ற அனுமதி இன்றி, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சட்டவிரோதக் கூட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
‘வாழ்க்கைச் சுமையைக் குறை - வாக்குறுதிகளை நிறைவேற்று’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த எதிர்ப்புப் பேரணி இன்று பிற்பகல் பொரளை கெம்பல் மைதானத்திற்கு அருகில் ஆரம்பமானது. பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்கள் பொரளை சந்தி மற்றும் மருதானை வழியாகச் சென்று புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த பேரணி சென்ற பாதை காரணமாக பொரளை மற்றும் மருதானை பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்த அவர்கள், மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அநியாய வரிகள் மற்றும் அத்தியாவசிய சுகாதார, கல்வி மற்றும் பிற சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை உடனடியாக ரத்து செய்யுமாறு கோரினர். அத்துடன், அரிசி, பருப்பு, தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளை உடனடியாகக் குறைக்குமாறும், கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும், பொதுப் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கான அரச ஒதுக்கீடுகளை அதிகரிக்குமாறும் அவர்கள் கோரினர். தற்போதுள்ள கடுமையான வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப, ஒரு குடும்பத்திற்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் மாதாந்திர குறைந்தபட்ச நிவாரண கொடுப்பனவை 15,000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.