வனாந்தர விகாரையில் மறைந்திருந்த ஞானசார தேரர் கைது

venerable-gnanasara-thero-arrested-while-hiding-in-a-forest-monastery

கலகொடஅத்தே ஞானசார தேரர், தீனியாவல, பிட்டிகல தவலம வீதியில் அமைந்துள்ள லெனகிரி ஆரண்ய சேனாசனத்தில் தங்கியிருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணை உத்தரவுகளின் அடிப்படையில் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 CCDயினால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.




அவரை கைது செய்வதற்கு முக்கிய காரணம், 2018 இல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் 2019 மே மாதம் வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை, கடந்த (29) ஆம் திகதி உயர் நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கியமையே ஆகும். ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன வழக்கு 2016 இல் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு 19 வருட கடூழிய சிறைத்தண்டனை (6 வருடங்களில் நிறைவடையும் வகையில்) விதிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், சந்தியா எக்னெலிகொட அம்மையார் உள்ளிட்ட பல தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசியலமைப்பின் உரிய நடைமுறையை மீறி தன்னிச்சையாக இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது எனத் தீர்ப்பளித்து அதனை செல்லுபடியற்றதாக்கியது. ஜனாதிபதி மன்னிப்பு செல்லுபடியற்றதானதைத் தொடர்ந்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட அசல் சிறைத்தண்டனை மீண்டும் அமுலுக்கு வந்ததுடன், அதனை அமுல்படுத்துவதற்காக அவரை கைது செய்ய உத்தரவிடப்பட்டது.




இது தவிர, கடந்த (30) ஆம் திகதி கொழும்பு இலக்கம் 09 உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நடவடிக்கைக்கு ஞானசார தேரர் ஆஜராகாத காரணத்தினால் மேலும் ஒரு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாக ஒரு உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

நீதிமன்ற பிடியாணை பெற்ற ஒருவருக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்பதால், ஞானசார தேரரின் விகாரைக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த பொலிஸ் பாதுகாப்பும் கடந்த 30 ஆம் திகதி முதல் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. குற்றச் செயல்களின் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கும் ஆதரவளித்தல் மற்றும் பாதுகாத்தல் சட்டத்தின் ஏற்பாடுகளின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஒரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.



இந்த கைது நடவடிக்கை கொழும்பு குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் அசங்க சுரவீரவின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கொள்ளப்பட்டது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில காரியவசம், பிரிவு ஐந்து பொறுப்பதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் மதுக பாசித ரசாஞ்சன உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஞானசார தேரர் நீதிமன்ற உத்தரவின்படி எதிர்காலத்தில் மீண்டும் முன்னர் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் ஐந்தரை வருட எஞ்சிய காலப்பகுதியை அனுபவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

venerable-gnanasara-thero-arrested-while-hiding-in-a-forest-monastery

Post a Comment

Previous Post Next Post