பஸில்லின் மாத்தற தென்னந்தோப்புக்கு தடை

ban-on-basils-matara-coconut-land

மாத்தறை - கதிர்காமம் பிரதான வீதியை ஒட்டி அமைந்துள்ள மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பிரதேசத்தில் ஒன்றரை ஏக்கர் தென்னந்தோட்டத்தில் நேற்று (06) மாலை ஒரு விசேட பதாகை காட்சிப்படுத்தப்பட்டது. "செயலிழக்கச் செய்யப்பட்ட சொத்து.

அத்துமீறி நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது, நல்லெண்ண உரிமையாளர்களின் உரிமைகளை உயர் நீதிமன்றம் மூலம் கோரலாம்" என்று பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரின் பெயரில் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 660 கோடி ரூபாய் பெறுமதியான இந்தச் சொத்து, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது என சந்தேகிக்கப்படும் ஒரு காணியாகும்.




பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற்கொண்ட மாத்தறை பிரதான நீதவான் சதுர திசாநாயக்க, 14 நாட்களுக்கு இந்தச் சொத்தை செயலிழக்கச் செய்து கடுமையான தடை உத்தரவைப் பிறப்பித்தார். அதன்படி, நேற்று மாலை 4.00 மணியளவில் சம்பந்தப்பட்ட காணி வளாகத்திற்கு வந்த நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அந்த உத்தரவை அமுல்படுத்தியதுடன், காணிக்குள் நுழையும் இடத்தில் சம்பந்தப்பட்ட பதாகை பொருத்தப்பட்டது.

இந்த சர்ச்சைக்குரிய காணி ஒப்பந்தம் பசில் ராஜபக்ஷ பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது. நீதிமன்ற விசாரணையில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின்படி, ஜேர்மன் நாட்டவரான ஹெர்பர்ட் கெல்லர் என்பவரிடமிருந்து இந்த காணியை வாங்குவதற்காக 660 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.




இந்த பெரும் தொகை பரிமாற்றம் செய்யப்பட்ட விதம் குறித்தும் விசாரணைகளில் தகவல்கள் வெளிவந்துள்ளன. சிங்கப்பூரின் 'ஈகிள் குரூப் அசோசியேட்டட்' மற்றும் ஹொங்கொங்கின் 'வேர்ல்ட் டயமண்ட்' நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட பணம் இந்த ஒப்பந்தத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பணம் பசில் ராஜபக்ஷவின் மைத்துனர், கால்நடை வைத்தியர் திஸ்ஸ கலப்பத்தி மற்றும் மைத்துனி அயோமி புண்ணியகாந்தி கலப்பத்தி ஆகியோருக்குச் சொந்தமான, நாராஹேன்பிட்டியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பராமரிக்கப்பட்ட கூட்டு கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சட்டவிரோதமாக சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் பணத்தைப் பயன்படுத்தி இந்த காணி பெறப்பட்டுள்ளது என்று கூறி, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.



இந்த ஒப்பந்தம் தொடர்பான சட்டச் சிக்கல்கள் மேலும் இறுக்கமடைந்து வருவதாக நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் தெரிகிறது. கடந்த வழக்கு விசாரணையின்போது பசில் ராஜபக்ஷவின் பிணைப் பணத்தை மாத்தறை பிரதான நீதவான் சதுர திசாநாயக்க பறிமுதல் செய்ததுடன், அவரை கைது செய்வதற்காக முன்னர் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மேலும் நீடிக்கப்பட்டது. அதன்படி, 14 நாட்கள் தடைக்குள்ளான இந்தச் சொத்து மற்றும் சம்பந்தப்பட்ட காணி ஒப்பந்தம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Post a Comment

Previous Post Next Post