
ஊடக சந்திப்பொன்றில் இனங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தமை தொடர்பான வழக்கில் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த 09 மாத சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாகவும், அந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவருக்கு சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தெகொட தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற மேன்முறையீடு பரிசீலிக்கப்படும் வரை, வழக்கு அடுத்த பெப்ரவரி 25 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படவும், அன்றைய தினம் ஞானசார தேரரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஞானசார தேரரை மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லும்போது, நீதிமன்ற வாயிலுக்கு முன்னால் கூடியிருந்த மகா சங்கத்தினர் பிரித் ஓதினர், பின்னர் தேரர் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.