ஐந்து கைபேசிகள், 42 சிம் கார்டுகள் மற்றும் சீனா உட்பட பல நாடுகளால் வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு கடவுச்சீட்டுகளை வைத்திருந்த 39 வயதுடைய நபர் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டதை அடுத்து, இலங்கையில் முதலீட்டாளர்களை இலக்காகக் கொண்டதாகக் கூறப்படும் ஒரு கொள்ளை கும்பல் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் விளைவாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் பின்னர் சந்தேகநபரைக் கைது செய்ய முடிந்தது. தேடுதல் நடவடிக்கையின் போது அவரிடமிருந்த சந்தேகத்திற்கிடமான கடவுச்சீட்டுகள், தொலைபேசிகள் மற்றும் சிம் கார்டுகள் என்பன பொலிஸாராலும் புலனாய்வாளர்களாலும் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட நபர் சீனாவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள ஒருவருடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள முதலீட்டாளர்களை இலக்காகக் கொண்டு செயல்படும் ஒரு கொள்ளை கும்பலுடன் அவர் தொடர்புடையவர் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அச்சுறுத்தல் மற்றும் பலவந்தம் மூலம் பணம் பறித்த குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுதல் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து கப்பம் பெறுதல் தொடர்பாக சந்தேகநபருக்கு எதிராக தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன, மேலும் அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.