
ஜனாதிபதியின் தலைமையில் நிகவெரட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் கூட்டத்திற்கு அருகில், சமூக ஊடகங்கள் மூலம் வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துக்களைப் பதிவிட்டு நாசகாரச் செயலுக்கு முயன்றதாகக் கூறப்படும் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கடந்த 11ஆம் திகதி கொபேகனே பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொபேகனே பிரதேசத்தைச் சேர்ந்த, ருஹுணு பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்வி கற்கும் 21 வயது இளைஞர் ஆவார். ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசாங்கத்தை விமர்சித்து தனது பேஸ்புக் கணக்கு மூலம் இந்த அறிக்கைகளை வெளியிட்டதே அவருக்கு எதிரான குற்றச்சாட்டாகும்.
கடந்த 11ஆம் திகதி ஜனாதிபதியின் பங்கேற்புடன் நிகவெரட்டிய வாராந்த சந்தை மைதானத்தில் மக்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்வாறான சூழ்நிலையில், சந்தேகநபரான மாணவர் தனது முகநூலில் வெளியிட்டிருந்த பதிவைக் கருத்தில் கொண்டு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஒரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மாணவரின் கையடக்கத் தொலைபேசியும் தற்போது பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் போது, 'நிகவெரட்டியவை இரத்தக் குளமாக்குவோம்' என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இந்த சம்பவம் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பல்கலைக்கழக மாணவர் தொடர்பில் நிகவெரட்டிய பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.