பன்னிப்பிட்டிய, தெப்பானம பிரதேசத்தில் அமைந்துள்ள இரும்பு கழிவுப் பொருட்களை வாங்கும் கடையில் இன்று (21) காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மகரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொரளை வீதியில் உள்ள பொல்வத்த சந்திக்கு அருகில் அமைந்துள்ள இந்த இடத்தில் காலை 9.05 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திடீரென ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த கோட்டே மாநகர சபைக்கு சொந்தமான மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதுடன், கொழும்பு தீயணைப்புப் பிரிவின் ஒரு தீயணைப்பு வாகனமும் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த தீ விபத்தினால் சம்பந்தப்பட்ட கடைக்கும், அங்கு இருந்த பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சேதங்கள் ஏற்பட்ட போதிலும், சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
கடையில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் மகரகம பொலிஸ் நிலையத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.