மகாவலி கங்கையின் நீர்மட்டம் தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், மாவிலாறு மதகு மற்றும் மாவிலாறு நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு இன்று (30) காலை 9.30 மணியளவில் சுமார் 13 இடங்களில் உடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடைந்த பகுதிகள் விரிவடைந்து வருவதாகவும், அவற்றைக் கட்டுப்படுத்துவது கடினம் என்றும் நீர்ப்பாசன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், சேருவில மங்கலமகா விகாரை பாதுகாப்பான இடமாக அறிவிக்கப்பட்டு, மக்கள் அங்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நேற்று வரை ஆபத்தான நிலையில் இருந்ததாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் நாயகம் அஜித் குணசேகர தெரிவித்திருந்தார்.
மாவிலாறு மதகு மற்றும் மாவிலாறு நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு உண்மையில் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், இருப்பினும் மதகு அல்லது அணைக்கட்டு உடையும் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்றும் அவர் அப்போது கூறியிருந்தார்.
ஆனால் அதே நேரத்தில், மகாவலி கங்கையில் நீர் அதிக வேகத்தில் பாய்வதாலும், அப்பகுதியில் பெய்த மழையாலும் மாவிலாறு நீர்த்தேக்கமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் ஒரே நீர்த்தேக்கம் போல காட்சியளிப்பதாகவும், இதனால் மதகு அல்லது அணை உடைந்து போகும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Tags:
News