இலங்கையில் நடைபெறும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரைக் காண வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், சுற்றுலா ஹோட்டல்கள் உட்பட முழு ஹோட்டல் துறையிலும் முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கான தேவை வேகமாக அதிகரித்துள்ளதாக கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப விலைகளையும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
தற்போது 800 முதல் 900 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் இருந்த தோலுடன் கூடிய ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1,100 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், ஒரு முட்டையின் விலை 36 முதல் 37 ரூபாய் வரை அதிகரித்துள்ளதுடன், தோலற்ற ஒரு கிலோ கோழி இறைச்சி 1400 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச். குணசேகர, அடுத்த சில நாட்களில் கோழி இறைச்சி விலைகள் மீண்டும் குறையும் என்று தெரிவித்தார்.