அலவத்துகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரம்புகேஎல, முதுனேகடை பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவு காரணமாக 15 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 43 பேர் காணாமல் போயுள்ளனர். இந்த அனர்த்தத்தைத் தொடர்ந்து, இலங்கை இராணுவம், பொலிஸ் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் பின்னர், நேற்று (29) மாலைக்குள் இடிபாடுகளுக்குள் இருந்து எட்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மத்திய மலைநாட்டுப் பகுதியில் பெய்த பலத்த மழையுடன் நேற்று அதிகாலையில் இந்த பாரிய மண்மேடு சரிந்து விழுந்துள்ளதுடன், மலையடிவாரத்தில் அமைந்திருந்த பல வீடுகள் இந்த மண்மேட்டின் கீழ் புதையுண்டு அழிந்துள்ளன.
இந்த துயரச் சம்பவம் பதிவானவுடன், கண்டி மாவட்டச் செயலகம், அக்குரணை பிரதேச செயலகம், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் அலவத்துகொட பொலிஸார் இணைந்து நிவாரணப் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
குறிப்பாக, இலங்கை இராணுவத்தின் தலைமையில் மண்மேட்டின் கீழ் புதையுண்டவர்களைத் தேடும் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், மோசமான காலநிலை மற்றும் இரவு நேரம் காரணமாக நேற்று மாலை அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டன. எவ்வாறாயினும், இன்று காலை முதல் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த பிரதேசம் நிலச்சரிவு அபாயம் அதிகம் உள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டதாகவும், அவ்வப்போது மக்களை வெளியேறுமாறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும் அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த அனர்த்தத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 15 பேர் காணாமல் போயுள்ளதாகவும், தாம் வசித்த வீட்டில் நிலவிய ஆபத்து காரணமாக உறவினர் வீட்டுக்கு வந்திருந்த சிலரும் இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளதாகவும் பிரதேசவாசிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
அனர்த்தத்திற்குள்ளான பிரதேசத்தை பார்வையிடும் பணிகளில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரியாஸ் பாருக் அவர்களும் கலந்துகொண்டதுடன், மிகவும் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த அனர்த்தம் காரணமாக 43 பேர் மண்மேடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களைத் தேடும் விசேட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார். சம்பவம் நடந்த இடத்திலிருந்து பெறப்பட்ட வீடியோ காட்சிகளை இங்கே கிளிக் செய்யவும்
Tags:
News
