பன்னல பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகளுக்குள் சிக்கியிருந்த எட்டு பேர், இந்திய கடற்படைக்குச் சொந்தமான இரண்டு ஹெலிகொப்டர்கள் மூலம் இன்று 29ஆம் திகதி வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். இலங்கையில் நிலவும் அவசரகால அனர்த்த நிலைமைக்கு பதிலளிக்கும் வகையில் இந்தியா வழங்கும் விமான உதவி மேலும் விரிவுபடுத்தப்பட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் நீர்மட்டம் உயர்வால் பன்னல பிரதேசத்தில் பல வீடுகளுக்கான அணுகல் வழிகள் தடைபட்டிருந்ததாகவும், இந்த ஹெலிகொப்டர்கள் அப்பகுதியில் பலமுறை பறந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், மேலதிக நடவடிக்கைகளுக்காக பிரதேச அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தீவு முழுவதும் மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகளுக்காக தற்போது நான்கு இந்திய ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றில் இரண்டு இந்திய கடற்படைக்குச் சொந்தமான 'ஐ.என்.எஸ் விக்ராந்த்' (INS Vikrant) கப்பலில் இருந்து இயங்குவதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து மக்களை வெளியேற்றுதல், அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்தல் மற்றும் அவசரகால நிவாரண சேவைகளை வழங்குதல் ஆகியவற்றுக்காக இலங்கை விமானப்படை, கடற்படை, இராணுவம் மற்றும் பொலிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து இந்த இந்திய விமானங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
பன்னல சம்பவத்தின் காணொளி இங்கே கிளிக் செய்யவும்
Tags:
News
