நித்தாம்புவ பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பிடியாணைதாரரை அவ்வாறு தடுத்து வைக்க பொலிஸாருக்கு சட்டரீதியான உரிமை இல்லை எனக் கூறி பொலிஸ் நிலையத்திற்குள் ரகளையில் ஈடுபட்ட பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கம்பஹா சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்துடன் இணைக்கப்பட்டு கடமையாற்றும் தாதியர் ஒருவர் என நித்தாம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்திற்கு காரணம், நீதிமன்றத்தை தவிர்த்து வந்த சந்தேகநபர் ஒருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 23ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமையே ஆகும்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை நித்தாம்புவ பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபரின் உறவினரான குறித்த பெண் அவரைப் பார்ப்பதற்காக பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.
அப்போது, பிடியாணைதாரரை தடுப்புக்காவலில் வைக்க பொலிஸாருக்கு எந்த உரிமையும் இல்லை எனக் கூறி அவர் பொலிஸ் அதிகாரிகளை திட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் பொலிஸ் நிலையத்திற்குள் ரகளையில் ஈடுபட்டு அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்த நிலையில், நித்தாம்புவ பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
News