ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை

gossiplanka image 1

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் முழுமையான வடிவம்

கௌரவ மகா சங்கத்தினரே, மதகுருமார்களே, பெற்றோர்களே, சகோதர சகோதரிகளே, பிள்ளைகளே,

ஒரு நாடாக நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் சவாலான இயற்கை அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம். அதேபோன்று, இந்நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான மீட்புப் பணியை நாம் முன்னெடுத்துள்ளோம் என்பதையும் நாம் அறிவோம். முழு நாடும் ஒரே நேரத்தில் அனர்த்தத்திற்கு உள்ளான வரலாற்றின் முதல் அனுபவம் இதுவாகும்.

நாடு நான்கு திசைகளிலும் நீரால் சூழப்பட்டு, அனர்த்தத்திற்கு உள்ளாகி இருக்கும் ஒரு சூழ்நிலையில், இந்த மிகக் கடினமான முயற்சியை நாம் வெற்றிகொள்ள வேண்டியுள்ளது. இந்த இரக்கமற்ற இயற்கை அனர்த்தம் எமது சிறிய தீவை அசைக்க முடிந்தாலும், இத்தீவின் மக்களின் மனிதநேயத்தையும் உறுதிப்பாட்டையும் எந்த வகையிலும் அசைக்க முடியாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனது நாட்டின் அன்புக்குரிய பிரஜைகளின் தளராத தைரியத்துடன் இணைந்து மீண்டும் இந்நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம்.

அன்பான பெற்றோர்களே, சகோதர சகோதரிகளே,

இந்த அனர்த்தத்தில் உயிரிழந்த அனைவருக்கும் மீண்டும் உயிரைக் கொடுக்க முடியுமானால், எந்த நிபந்தனைக்கும் கட்டுப்பட்டு அதை நிறைவேற்ற நாங்கள் இருமுறை சிந்திக்க மாட்டோம். ஆனால் நாம் யதார்த்தத்தின் வேதனையான உண்மையை எதிர்கொள்ள வேண்டும். இழந்தவர்கள் பற்றிய வலி என்றென்றும் நம்மிடையே இருக்கும். உயிரிழந்த எவரும் எங்களுக்கு வெறும் எண்கள் அல்ல. ஒவ்வொரு உயிருடனும் ஒரு பெயர், ஒரு முகம் மற்றும் ஒரு கதை இருக்கிறது.

உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் நாங்கள் இதயப்பூர்வமாக எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். வெறும் அனுதாபத்துடன் மட்டும் நின்றுவிடாமல், அக்குடும்பங்களுக்கு அந்த உயிர்களை மீண்டும் பெற்றுத் தர முடியாவிட்டாலும், செய்யக்கூடிய அனைத்தையும் வழங்குவதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம். அதேபோன்று, இந்த நேரத்தில் காணாமல் போயுள்ள அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனை எங்களிடம் உள்ளது.

வாழ்க்கை அனர்த்தத்திற்கு உள்ளாகி இருக்கும் பலரின் துன்பங்களை தணிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தைரியம் அளிக்கவும் முன்வந்த அனைவரின் கைகளையும் நாங்கள் அன்புடன் பற்றிக்கொள்கிறோம். இயற்கை அனர்த்தங்கள் மற்றும் பேரிடர்கள் ஏற்படுவதும், அவற்றைக் கட்டுப்படுத்த முடியாத போது ஏற்படும் அழிவுகள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத ஆபத்துக்களை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதும், நாட்டை மீண்டும் முன்னைய நிலைக்கு அல்லது அதைவிட சிறந்த நிலைக்கு கட்டியெழுப்புவதும் ஆகிய இந்த மூவகை செயற்பாடுகளின் பொறுப்பு அரசாங்கத்தைச் சாரும்.

அதற்காக எடுக்கக்கூடிய மற்றும் எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகளை, எத்தகைய கடினமான சூழ்நிலையின் கீழும் எடுப்பதற்கு நாம் எதிர்பார்க்கிறோம். இவ்வாறான அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்கும்போது வசதிகள் மற்றும் கருவிகளுக்கு வரம்புகள் உள்ள ஒரு நாட்டில், எம்மிடம் உள்ள இரும்பு போன்ற மனித வளம் மற்ற எல்லாவற்றையும் விட பெறுமதியானது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆபத்தின் போது கைவிடாத, எப்போதும் உதவும், தன்னம்பிக்கை நிறைந்த எமது நாட்டு பிரஜைகள் குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம்.

நாம் எதிர்காலத்தில் முகங்கொடுக்க வேண்டியது, அன்று முதல் இன்று வரை இல்லாத மிகப்பெரிய புனரமைப்பு முயற்சிகளுக்கும் மற்றும் மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்குமே என்பதை நாம் நினைவுகூர வேண்டும். அழிவின் அளவு குறித்த உத்தேச மதிப்பீடு அந்தளவு பாரதூரமானது. ஆயினும், எமது நாட்டு மக்கள் வெள்ளம், புயல் அல்லது எந்தவொரு அனர்த்தத்திற்குப் பின்னரும் உறுதியுடன் மீண்டும் எழுந்து நின்றுள்ளனர்.




இந்த அனர்த்தத்தின் ஆரம்பத்தில் எமது முதல் பணியாக அமைந்தது, அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த பிரஜைகளை அதிலிருந்து மீட்பதேயாகும். அதற்காக எமது ஒட்டுமொத்த அரச இயந்திரத்தையும் மிகவும் வினைத்திறனுடன் வழிநடத்துவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதில் எமது முப்படையினரும், பொலிஸாரும் தங்கள் உயிராபத்தைப் பொருட்படுத்தாமல், சில இடங்களில் தங்கள் உயிரைத் தியாகம் செய்து, எமது மக்களை மீட்பதற்காக வீரமிக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அவர்கள் குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். அவர்களுக்கு நாம் தேசத்தின் கௌரவத்தைச் செலுத்த வேண்டும்.

அதேபோன்று எமது அமைச்சின் செயலாளர்கள் முதல் கீழ்மட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள கிராம உத்தியோகத்தர்கள் வரை அனைத்து அரச இயந்திரமும், சுறுசுறுப்பாகத் தலையிட்டு அந்த அனர்த்தத்திற்கு உள்ளான மக்களை மீட்பதற்காகப் பாரிய பணியை நிறைவேற்றின. அதைத் தங்கள் கடமைக்கு அப்பாற்பட்ட மனிதாபிமானப் பணியாகப் புரிந்துகொண்டு, அந்தப் பணிக்கு இதயபூர்வமான பிணைப்புடன் தங்கள் கடமையை நிறைவேற்றினர். அவர்களுக்கு நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்.

மேலும், அனர்த்தத்திற்கு உள்ளான மக்களை மீட்பதற்காகத் தாமாக முன்வந்து பெருமளவிலானோர் தலையிட்டுள்ளனர். தான் அனர்த்தத்திற்கு உள்ளாகாவிட்டாலும், தனது அயலவர்கள் அனர்த்தத்திற்கு உள்ளாவதை, தனது பக்கத்து கிராமத்து நபர் அனர்த்தத்திற்கு உள்ளாவதை, தனக்கு அடுத்த மாவட்டத்தில் உள்ளவர் அனர்த்தத்திற்கு உள்ளாவதைத் தனது சொந்த அனர்த்தமாகக் கருதி, எமது நாட்டுப் பிரஜைகள் அந்த அனர்த்தத்திற்கு உள்ளான மக்களை மீட்பதற்காகப் பாரிய மனிதாபிமானப் பணியை நிறைவேற்றினார்கள் மற்றும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அது குறித்து அவர்களை நாம் இந்த நேரத்தில் நினைவுகூர வேண்டும்.

அதேபோன்று இந்த மீட்பு நடவடிக்கையில் எமது அயல் நாடுகள் மற்றும் எமது நட்பு நாடுகள் எமக்குப் பெரிதும் உதவி வழங்கியுள்ளன. ஏற்கனவே ஹெலிகாப்டர் விமானங்களை வழங்கியும், சில மீட்புக் குழுக்களை வழங்கியும் வெளிநாட்டு அரசுகள் நம்மை நோக்கி அவர்களின் நட்பின் கரத்தை நீட்டியுள்ளன. எமது நாட்டு மக்கள் சார்பாக அவர்களுக்கு நாங்கள் மிகவும் நன்றி கூறுகிறோம்.

இந்த மீட்புப் பணியில் தற்போது நாம் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியை நிறைவேற்றி முடித்துள்ளோம். விசேடமாக அந்த மீட்கப்பட்ட மக்கள் பிரதானமாக மூன்று குழுக்களாக தற்போது வாழ்ந்து வருகின்றனர். முதலாவது குழு, தங்கள் வீட்டிற்குள்ளேயே அல்லது அருகிலேயே இடம்பெயர்ந்தவர்கள். இரண்டாவது குழு, தங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களின் வீடுகளில் இடம்பெயர்ந்தவர்கள். மூன்றாவது குழு, இடம்பெயர்வு முகாம்களில் வாழும் தரப்பினராகும்.

எமது நாட்டில் இருந்த சில சுற்றறிக்கைகள் இந்த மூன்று சமூகங்களுக்கும் நிவாரணம் வழங்குவதற்குத் தடைகளை ஏற்படுத்தியிருந்தன. நாங்கள் அந்தச் சுற்றறிக்கைகள் அனைத்தையும் மாற்றி, இடம்பெயர்ந்து இருப்பது எங்கே, தங்கியிருப்பது எங்கே என்ற பாகுபாடின்றி, அனைவருக்கும் அரசின் நிவாரணங்களை வழங்குவதற்குத் தேவையான வேலைத்திட்டத்தைத் தயார் செய்துள்ளோம்.

அதேபோன்று எமது சில சுற்றறிக்கைகள், எமது அதிகாரிகளுக்குத் தேவையானவாறு பணத்தைப் பயன்படுத்துவதற்குத் தடையை ஏற்படுத்தியிருந்தன. அந்தச் சுற்றறிக்கைகளை நாங்கள் மாற்றியுள்ளோம். ஒரு பிரதேச செயலாளருக்கு 500 இலட்சம் (50 மில்லியன்) வரை பணத்தைச் செலவிடுவதற்குச் சந்தர்ப்பத்தை நாங்கள் வழங்கியுள்ளோம். நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதற்கும், அந்த ஒதுக்கீடுகளை வினைத்திறனுடன் செயல்படுத்துவதற்கும் தேவையான சட்டப் பாதுகாப்புகளை நாங்கள் எமது அரச அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளோம்.

அதேபோன்று உங்களுக்குத் தெரியும், கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒதுக்கீடுகளில் சுமார் 3000 கோடி ரூபா எம்மிடம் உள்ளது. பாராளுமன்ற அனுமதியின்றி நாங்கள் செலவிடக்கூடிய அந்த அனைத்து ஒதுக்கீடுகளையும் நாங்கள் இதற்காக ஒதுக்கியுள்ளோம். நாங்கள் அரசாங்க அதிபர்களுக்கு அறிவித்துள்ளோம்; உங்களுக்கு எவ்வளவு பணத் தொகை தேவை? எவ்வளவு பணிகளைச் செய்வதற்கு உங்களுக்குச் செலவுச் சுமையை ஏற்க வேண்டியுள்ளது? அவை அனைத்தையும் வழங்க நாங்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

2025 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதாது என்றால், குறைநிரப்புப் பிரேரணைகள் ஊடாகப் பாராளுமன்றத்தின் மூலம் புதிய ஒதுக்கீடுகளை வழங்குவதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதன் ஊடாக எமது இடம்பெயர்ந்த மக்களின் உணவு, சுகாதாரம் மற்றும் துப்புரவுத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.




எமது அடுத்த கட்டம், விசேடமாக இந்த அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய சேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் நிறுவுவதாகும். பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. அதேபோன்று நீர் வசதிகள், தொடர்பாடல் வசதிகள், வீதி முறைமைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நாம் அந்த ஒவ்வொரு துறையையும் விரைவாகவும் வினைத்திறனுடனும் மீண்டும் நிறுவுவதற்குத் தேவையான செயற்பாட்டுப் பணிகளைக் கட்டமைத்துள்ளோம்.

பாதிப்புக்கு உள்ளாகாத பிரதேசங்கள் இருக்குமாயின், அப்பிரதேசங்களின் ஆளணியினரை முழுமையாக நாங்கள் இந்தப் பாதிப்புக்கு உள்ளான பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதற்காக ஈடுபடுத்தியுள்ளோம். அதேபோன்று அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களில் வேறு பணிகள் இருந்திருந்தால், அந்த வேறு பணிகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, இதை முதன்மையான பணியாகக் கருதி இந்த உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவுவதற்காக நாங்கள் ஏற்கனவே வேலைத்திட்டமொன்றைத் தயார் செய்துள்ளோம். மின்சார சபை, நீர் வழங்கல் சபை, போக்குவரத்து சபை, அதேபோன்று தொடர்பாடல் நிறுவனங்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை போன்ற அத்தியாவசிய நிறுவனங்களுடன் நாங்கள் நெருக்கமாகச் செயல்பட்டு, அதற்காகத் தேவையான பங்களிப்பு மற்றும் வழிகாட்டலை நாங்கள் வழங்கிக்கொண்டிருக்கிறோம். அதனால் மிகக் குறுகிய காலத்திற்குள் இந்த உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகளை முழுமையாக வழமை நிலைக்குக் கொண்டுவரும் ஆற்றல் எமக்கு உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.

எமது அடுத்த பிரதான முன்னுரிமை, இந்த அனர்த்தத்திற்கு உள்ளான நாட்டைக் குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால ரீதியாகக் கட்டியெழுப்புவதாகும். விலைமதிப்பற்ற உயிர்களை நாம் இழந்தோம், இன்னும் கணக்கிட முடியாத பௌதீக வளங்களை நாம் இழந்தோம். வீதிகள் மற்றும் பாலங்களில் இருந்து பாடசாலைகள் மற்றும் நீர் விநியோகக் கட்டமைப்புகள் வரை, அனர்த்த வலயத்தின் பொது உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைக்கும் பாரியதொரு பணியைச் செய்ய வேண்டியுள்ளது.

கவனமாகவும் முறையாகவும் தலைதூக்கப் போராடிக்கொண்டிருந்த ஒரு நாட்டுக்கு இந்த நிலைமை சாதாரண சவாலல்ல. சிறிய சுயதொழிலில் இருந்து பாரிய கைத்தொழில்கள் வரையும், சிறு அளவிலான வர்த்தகர் முதல் பாரிய அளவிலான வர்த்தகர் வரையும், இந்த அனைத்துத் துறைகளும் தங்கள் வருமானங்களை இழத்தல் மற்றும் தங்கள் கைத்தொழில்கள் வீழ்ச்சியடைதல் என்ற ஆபத்துக்கு முகங்கொடுத்துள்ளன. அதேபோன்று விவசாயத்தில் ஈடுபடும் விவசாய மக்கள், கால்நடைத் துறை விவசாய மக்கள் போன்ற துறைகள் பாரிய வீழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளன.

அதனால் எமக்கு ஒரு விரைவான திட்டம் தேவை, இத்துறைகளை மிக வேகமாக மீட்டெடுப்பதற்கு. அதற்காக தற்போது நாம் வினைத்திறனான சேவையை வழங்குவதற்காகவும், இந்த அனர்த்த நிலைமையை முகாமைத்துவம் செய்துகொண்டு, விரைவான, வினைத்திறனான மீள் கட்டுமானத்திற்குத் தேவையான சட்டப் பாதுகாப்பு மற்றும் நிதித் தேவைக்காகவும் நாம் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளோம்.

நான் இந்நாட்டுப் பிரஜைகளுக்கு ஒரு உறுதியை வழங்க விரும்புகிறேன். இந்த அவசரகாலச் சட்டத்தை இந்த அனர்த்தத்தை முகாமைத்துவம் செய்வதற்கும், வினைத்திறனுடன் எமது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் பயன்படுத்துவதைத் தவிர, வேறு எந்தவொரு அடக்குமுறைச் செயற்பாட்டிற்காகவும் இந்த அவசரகாலச் சட்டத்தை நாங்கள் பயன்படுத்த மாட்டோம். இந்த அவசரகாலச் சட்டத்திற்கு அமைவாக ஏற்கனவே நாங்கள் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் ஒருவரை நியமித்துள்ளோம். அனைத்து சேவைகளையும் நாங்கள் ஓரிடத்தில் மையப்படுத்தியுள்ளோம். 24 மணி நேரமும் அத்தியாவசிய சேவை அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. அனைத்து முக்கிய நிறுவனங்களின் அதிகாரிகளும் 24 மணி நேரமும் அதில் தங்கியிருக்கிறார்கள். அதனால் மிகவும் வினைத்திறனான மையப்படுத்தப்பட்ட செயற்பாடொன்றை இந்த அத்தியாவசிய சேவை அலுவலகத்தின் ஊடாக முன்னெடுப்பதற்கு நாங்கள் திட்டமொன்றைத் தயார் செய்துள்ளோம்.

அதேபோன்று எமது அடுத்த பணியாக மாறியிருப்பது, மீண்டும் எமது நாட்டை இருந்த நிலையை விட முன்னேறிய ஒரு அரசாக மாற்றிக்கொள்ளும் எதிர்பார்ப்பாகும். அந்த எதிர்பார்ப்பிற்காக, ஏற்கனவே நாங்கள் மீண்டும் கட்டியெழுப்புவதற்குத் தேவையான நிதியைத் திரட்டிக்கொள்வதற்காக நிதியமொன்றை ஸ்தாபிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். அதேபோன்று அந்த நிதியத்தை முகாமைத்துவம் செய்வதற்காகத் தனியார் துறை, வெளிவிவகார அமைச்சு, நிதி அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் செயலாளர்களைக் கொண்ட முகாமைத்துவக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்குப் பாரிய பணியொன்றை நாங்கள் ஒப்படைத்துள்ளோம்; அதாவது எமது நாட்டைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான நிதியைத் திரட்டிக்கொள்வதாகும். பல வழிகளில் எம்மால் நிதியைத் திரட்டிக்கொள்ள முடியும். நாம் நட்பு நாடுகளுடன் மிக நெருக்கமாகச் செயல்பட்டு அவர்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளல், அதேபோன்று பல்வேறு சர்வதேச அமைப்புகளை விளித்து அவர்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளல், அதற்கு மேலதிகமாக உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் கைத்தொழிலதிபர்களை விளித்து அவர்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளல் போன்றவை இதில் அடங்கும்.

விசேடமாக இந்த வேளையில் இலங்கைக்கு வெளியே வாழும் இலங்கைப் பிரஜைகள் இந்த உதவிகளை வழங்குவதற்காகப் பாரிய முயற்சியுடனும் பாரிய விருப்பத்துடனும் செயல்பட்டு வருகின்றனர். நாங்கள் அவர்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதனால் இந்த அனர்த்தத்தில் இருந்து மீள்வதற்கு நாங்கள் பலமான நிதியமொன்றைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அந்த நிதியத்தைத் திரட்டிக்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை நாங்கள் தயார் செய்துள்ளோம்.



அதேபோன்று நாங்கள் அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளோம், நீங்கள் முகங்கொடுத்துள்ள சேதத்தின் அளவு மற்றும் அதை மீண்டும் கட்டியெழுப்புவதற்குத் தேவையான ஒதுக்கீடுகள் குறித்து பலமான பட்டியலொன்றைத் தயார் செய்யுமாறு. எமக்குத் தெரியும் பெரும்பாலும் எமது நாடு முகங்கொடுக்கும் நிலைமைதான் சரியான தரவுகள் மற்றும் சரியான தகவல்கள் இல்லாமைக்கான விளைவுகளுக்கு நாம் முகங்கொடுக்க நேரிடுவது. இந்த நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமென்றால் எமக்குச் சரியான தரவுகள் மற்றும் தகவல்கள் தேவை.

நீர்ப்பாசனத் திணைக்களம் தங்கள் திணைக்களத்திற்குச் சொந்தமான நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்டுள்ள சேதம் மற்றும் அதை மீண்டும் நிறுவுவதற்குத் தேவையான நிதி குறித்தும், விவசாயத் திணைக்களம் விவசாய மக்களின் விவசாயத்திற்கு ஏற்பட்டுள்ள அழிவு மற்றும் அதை மீண்டும் கட்டியெழுப்புவதற்குத் தேவையான நிதியின் அளவு குறித்தும் ஆராய வேண்டும். இது போன்ற ஒவ்வொரு துறைக்கும் நாங்கள் அறிவித்துள்ளோம், உங்கள் துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தையும், அதேபோன்று அந்த வேலைத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தேவையான ஒதுக்கீடுகளையும் எமக்கு மிக விரைவில் அறிவிக்குமாறு. அதற்கமைய எமக்கு மிக விரைவான அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக எமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்பக் கூடியதாக உள்ளது.

ஒரு நாடாக நீண்ட கால இலக்குகளை வெற்றிகொள்ளவும், ஒன்றாக வாழ்வதற்கும் இருந்த சந்தர்ப்பங்களை வரலாறு தவறவிட்டுள்ளதுடன், இம்முறை அதைத் தவறவிடாத இடத்திற்கு கொண்டு செல்லும் உறுதிப்பாடு எம்மிடம் உள்ளது. இந்த பாரதூரமான அனர்த்த வேளையில் எமக்காக ஏற்கனவே முன்வந்த, எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நட்பு நாடுகளுக்கும், அவற்றின் தலைவர்களுக்கும், பிரஜைகளுக்கும் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கும் நாங்கள் நன்றியைத் தெரிவிக்கிறோம். எமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அவர்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள முறையான பொறிமுறையொன்றை நாங்கள் ஏற்கனவே ஸ்தாபித்துள்ளோம்.

இந்தத் தீர்க்கமான அனர்த்த வேளையில் அனைத்து அரசியல் கொள்கைகளையும் நாட்டுக்காக மறப்போம். இனம், மதம், கட்சி, நிற வேறுபாடுகள் இன்றி ஒன்றிணைவோம். அரசியல் செய்வதற்குப் போதுமான காலம் உள்ளது, ஆனால் அனர்த்தத்திற்கு முகங்கொடுக்க மிகக் குறைந்த காலமே உள்ளது. நாம் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம். கட்டியெழுப்பிய பின்னர் அந்த நாட்டில் தனித்தனியாக அரசியல் செய்ய எமக்கு முடியும்.

விசேடமாக எனக்கு இது குறித்துப் பெரிய நம்பிக்கை உள்ளது. நான் இந்நாட்டைக் கட்டியெழுப்புவது குறித்து அசைக்க முடியாத நம்பிக்கையுடன் செயல்படுவது, நான் எமது நாட்டுப் பிரஜைகள் மீது நம்பிக்கை வைத்துள்ளதாலாகும். நான் எமது நாட்டின் முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட அரச ஊழியர்கள் மீது நம்பிக்கை வைக்கிறேன். நான் இந்நாட்டின் கைத்தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் மீது நம்பிக்கை வைக்கிறேன். நான் இந்நாட்டின் புத்திஜீவிகள், கண்டுபிடிப்பாளர்கள் மீது நம்பிக்கை வைக்கிறேன். நான் எமது நாட்டிற்கு வெளியே வாழும் புலம்பெயர் இலங்கையர்கள் மீது நம்பிக்கை வைக்கிறேன். அதேபோன்று எமக்கு நட்பு நாடுகள் மீது நாங்கள் நம்பிக்கை வைக்கிறோம்.

அந்த நம்பிக்கையுடன் இந்நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்ற கடும் உறுதிப்பாட்டுடன் நாங்கள் இந்தப் பணியில் தலையிட்டுள்ளோம். நிச்சயமாக நாங்கள் முன் இருந்ததை விடச் சிறந்த ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவோம். இங்கிருந்து அது பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்க வேண்டி ஏற்பட்டாலும் நாங்கள் அந்தச் சவாலை ஏற்றுக்கொள்கிறோம். அதற்காகக் குறுகிய வாத பேதங்கள் இன்றி அனைவரும் இந்தச் கூட்டு முயற்சியில் இணையுமாறு நாங்கள் அழைக்கிறோம். தேசிய மற்றும் சர்வதேச வேலைத்திட்டமொன்றின் ஊடாகச் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு, மனசாட்சிக்கு இணங்கவே எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை நிறைவேற்றிக்கொள்ள அர்ப்பணிப்போம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

எந்த இருளிலும் ஒளி உண்டு என்று நாங்கள் நம்புகிறோம். இந்த இருண்ட நாட்கள் கடந்து செல்லும் என்றும் நாங்கள் நம்புகிறோம். அதனால் நாங்கள் ஒன்றாக எழுந்து நிற்போம். இந்தக் கண்ணீர் சிந்தும் பூஞ்சோலையைக் குணப்படுத்துவோம். பிரகாசமான வாழ்வைக் கட்டியெழுப்புவோம்.

அனைவருக்கும் மும்மணிகளின் சரணம், இறை ஆசி.

 

Post a Comment

Previous Post Next Post