இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ள அரசின் துரித நடவடிக்கைகள்

government-actions-in-the-face-of-natural-disasters

 நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகளை நிர்வகிக்கும் நோக்கில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் உயர்மட்ட விசேட கலந்துரையாடல்கள் இன்று காலை பாதுகாப்பு அமைச்சில் ஆரம்பமாகியுள்ளன.



அனர்த்த நிலைமையை எதிர்கொள்வதற்கு துரித தீர்மானங்களை எடுக்கும் நோக்கில், இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று பாராளுமன்ற அமர்வு ஆரம்பத்தில் தெரிவித்தார்.




இதற்கு இணையாக, பாதுகாப்பு அமைச்சிலிருந்து இணையவழி (Zoom) ஊடாக மாவட்ட செயலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, எவ்வித தடங்கலும் இன்றி மிகவும் வினைத்திறனாக அனர்த்த நிவாரண சேவைகளை அமுல்படுத்துமாறும், அதற்கான நிதி ஒதுக்கீடுகளை உடனடியாக கோருமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அனர்த்த நிவாரண சேவைகளை முன்னெடுப்பதற்காக அரசாங்கம் ஏற்கனவே 1200 மில்லியன் ரூபாவை (1.2 பில்லியன்) ஒதுக்கியுள்ளதுடன், அவசர தேவைகளுக்காகப் பயன்படுத்துவதற்காக 2025ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் மேலும் 30 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் இங்கு குறிப்பிடப்பட்டது.




நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த கடுமையான அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்துமாறு சஜித் ஜன பலவேகயவின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்ததுடன், அனர்த்த நிவாரண சேவைகளை முறையாக முன்னெடுப்பதற்கு ஆதரவளிக்கும் வகையில் அனைத்து பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் மற்றும் தினசரி ஓய்வு நேரங்களை இரத்து செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், பாதுகாப்பு நடவடிக்கையாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மின்சார விநியோகத்தை தற்காலிகமாக துண்டிக்க மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதுடன், நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கைகளையும் இன்று (28) நண்பகல் 12.30 மணிக்கு இடைநிறுத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post