முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜோஹான் பெர்னாண்டோவை எதிர்வரும் ஜனவரி மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டது. பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
கடந்த 30 ஆம் திகதி இப்பாகமுவ, கும்புக்வெவ பிரதேசத்தில் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்றினால் ஜோஹான் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டார். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வர்த்தக மற்றும் கூட்டுறவு அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல முறைகேடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
குறிப்பாக, லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொரி வண்டியொன்றையும் மேலும் பல வாகனங்களையும் குற்றவியல் நம்பிக்கை துரோகம் செய்து தவறாகப் பயன்படுத்தியமை இவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டாகும். அத்துடன், அமைச்சர் பணியாளர் ஒருவராக நடித்து முறையற்ற விதத்தில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற்று அரசாங்கப் பணத்தை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாகவும் ஜோஹான் பெர்னாண்டோ மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு தெரிவித்துள்ளதுடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.