'தித்வா' அனர்த்த நிலைமை காரணமாக சுமார் 23 நாட்களாக முடங்கியிருந்த மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு, இன்று (20) பதுளைக்கும் அம்பேவளைக்கும் இடையில் விசேட ரயில் ஒன்று இயக்கப்பட்டது. மலையக ரயில் மார்க்கத்திற்கு ஏற்பட்ட பாரிய சேதத்தினால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பிய நிலையில் இந்த முதல் பயணம் ஆரம்பமானது.
அதன்படி, இன்று காலை 9.00 மணிக்கு Class S14 வகை சக்திவாய்ந்த பெட்டிகளைக் கொண்ட (SPL 1016) விசேட மலையக ராணி ரயில் பதுளை ரயில் நிலையத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்ததுடன், காலை 9.30 மணிக்கு அம்பேவளையிலிருந்து மீண்டும் பதுளை நோக்கி அதன் சேவை இடம்பெற்றது. அனர்த்த நிலைமை காரணமாக பாரிய சேதமடைந்த இந்த ரயில் மார்க்கப் பகுதியை துரிதமாக வழமைக்குக் கொண்டுவர இலங்கை ரயில்வே திணைக்கள ஊழியர்கள், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO),
பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் அதிகார சபை உள்ளிட்ட பல தரப்பினரும் பெரும் முயற்சி எடுத்துள்ளனர்.
நாட்டின் சுற்றுலாத் துறையின் முதுகெலும்பாக விளங்கும் மலையக ரயில் மார்க்கம், நுவரெலியா மற்றும் எல்ல போன்ற சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பகுதிகளுக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் முக்கிய தேர்வாக இருப்பதால், இந்த புனரமைப்புப் பணிகள் துரிதமாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரயில் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து, இன்று முதல் பதுளைக்கும் அம்பேவளைக்கும் இடையில் பல ரயில் சேவைகளை இயக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இந்த விசேட சந்தர்ப்பத்தை அவதானிப்பதற்காக அமைச்சர் சமந்த வித்யாரத்ன, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.
இந்த சந்தர்ப்பத்தில் மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்காக ரயில் நிலையத்திற்கு பப்பரே குழுக்கள் அழைக்கப்பட்டிருந்தன. வெளிநாட்டவர்களுடன் பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்கவும் 'பப்பரே நடனம்' ஆடுவதைக் காண முடிந்தது.
இந்த சந்தர்ப்பத்தின் வீடியோவை இங்கே CLICK செய்யவும்
Tags:
Trending

