வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை மே மாதம் 01 ஆம் திகதிக்கு பதிலாக மே மாதம் 30 ஆம் திகதிக்கு மாற்றுமாறு மும்மகா பீடாதிபதிகளால் செய்யப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றஅரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும், வெகுசன ஊடக மற்றும் சுகாதார அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் குறிப்பிடுகையில், மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய செய்தியின்படி இந்தத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.
சில மாதங்களில் இரண்டு போயா தினங்கள் வரும் சந்தர்ப்பங்கள் இருப்பதால்
அது குறித்து மகாநாயக்க தேரர்களின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களின் அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு அமைய அந்தக் காரியங்கள் அதேபோன்று மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டினார். அரச நிர்வாக அமைச்சு இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருவதாகவும், மகா சங்கத்தின் அறிவுறுத்தல்களின்படி வெசாக் போயா தின நிர்ணயம் நடைபெறும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.