இலங்கையின் டிஜிட்டல் துறையில் புத்தாக்கம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பதுடன், அரசாங்க சேவைகளை நவீனமயமாக்குவது உட்பட பல துறைகளுக்காக, உலக வங்கி 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
உலக வங்கி குழுமத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் அரசாங்க சேவைகளை நவீனமயமாக்குவதன் மூலம், அவற்றை பொதுமக்களுக்கு மிகவும் திறமையாகவும் எளிதாகவும் அணுகக்கூடியதாக மாற்றுவதாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையின் டிஜிட்டல் துறை மேம்படுத்தப்பட்டு, மக்களின் மற்றும் வணிக சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இலங்கை டிஜிட்டல் மாற்றத் திட்டம்" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த முன்முயற்சி, அரசாங்க சேவைகளுக்கான ஒருங்கிணைந்த இணைய குடிமக்கள் சேவை போர்டல், செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக அரச நிறுவனங்கள் முழுவதும் தரவு பகிர்வுக்கான பாதுகாப்பான அமைப்பு, டிஜிட்டல் ஆவணங்களை சேமிப்பதற்கான ஒரு சிறப்பு டிஜிட்டல் சாளரம் மற்றும் அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப அளவிடக்கூடிய ஒரு தளம் உள்ளிட்ட மைய டிஜிட்டல் தீர்வுகளுக்கு ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.