இந்தியாவின் அசாம் மாநிலம் ஹோஜாய் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை நடந்த பயங்கர ரயில் விபத்தில் எட்டு காட்டு யானைகள் உயிரிழந்தன, ஒரு குட்டி யானை காயமடைந்தது. இந்த துயர சம்பவம் காரணமாக ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
சாராங்கில் இருந்து புதுடெல்லி நோக்கிச் சென்ற ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் யானைக் கூட்டத்தின் மீது மோதியதில் என்ஜின் மற்றும் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டன, அதிர்ஷ்டவசமாக எந்தப் பயணிகளுக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். விபத்து நடந்த இடத்திலேயே எட்டு யானைகள் உயிரிழந்தன, காயமடைந்த ஒரு குட்டி யானையை மீட்க முடிந்தது என்று வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.மிசோரம் சாராங்கில் இருந்து டெல்லியின் ஆனந்த் விஹார் முனையம் வரை செல்லும் இந்த ரயில், குவஹாட்டி நகரத்திலிருந்து சுமார் 126 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஆபத்தான இடத்தைக் கடந்து சென்றபோது அதிகாலை 2:17 மணியளவில் இந்த துயர சம்பவத்தை சந்தித்தது. விபத்து நடந்த உடனேயே, மீட்பு ரயில்களும் ரயில்வே அதிகாரிகளும் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கினர். ரயில் தடம் புரண்டதாலும், இறந்த விலங்குகளின் உடல்கள் ரயில் பாதை முழுவதும் சிதறிக் கிடந்ததாலும் மேல் அசாம் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே அதிகாரிகள் விபத்துக்குள்ளான பெட்டிகளில் இருந்த பயணிகளை உடனடியாக ரயிலின் மற்ற பெட்டிகளில் உள்ள காலி இருக்கைகளுக்கு மாற்றினர், மேலும், ரயில் குவஹாட்டி வந்தடைந்ததும் அனைத்துப் பயணிகளுக்கும் வசதி செய்ய கூடுதல் பெட்டிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் அறிக்கைகளின்படி, இந்த பகுதி பொதுவாக யானைகள் கடந்து செல்லும் பாதையாக அடையாளம் காணப்படவில்லை. ரயில் பாதையில் யானைக் கூட்டத்தைப் பார்த்தவுடன் ஓட்டுநர் அவசரமாக பிரேக் பிடித்தாலும், யானைகள் ரயில் நோக்கி ஓடி வந்ததால் இந்த மோதலைத் தவிர்க்க முடியவில்லை. இதற்கு முன்னர், கடந்த நவம்பர் 30 அன்று மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் ஒரு ரயில் மோதியதில் மற்றொரு யானை உயிரிழந்து, ஒரு குட்டி யானை காயமடைந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா முழுவதும் ரயில்களில் மோதி 79 யானைகள் உயிரிழந்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியது. சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் மக்களவையில் குறிப்பிடுகையில், இந்தத் தரவுகள் 2020 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் அமைந்தவை என்றார். கடந்த ஆண்டு ஜூலை 18 அன்று மேற்கு வங்கத்தில் ஒரு தாய் மற்றும் குட்டி உட்பட மூன்று யானைகள் ரயிலில் மோதி உயிரிழந்ததையும் அவர் உறுதிப்படுத்தினார். இருப்பினும், ரயில் பாதைகளில் ஏற்படும் மற்ற வனவிலங்குகளின் இறப்புகள் குறித்த ஒருங்கிணைந்த தரவுகள் அமைச்சகத்திடம் இல்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.