சதோச நிறுவனத்திற்குச் சொந்தமான லொரி வண்டியை தவறாகப் பயன்படுத்தி அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்காக பொலிஸார் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சரின் மகன் ஜோஹான் பெர்னாண்டோ நேற்று (30) குருநாகல் பிரதேசத்தில் பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சதோச நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த லொரி வண்டி, அவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் எத்தனால் நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் செயற்பட்ட பொலிஸார், பணமோசடி, பொதுச் சொத்துச் சட்டத்தை மீறுதல், அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் குற்றவியல் ரீதியான தவறான பயன்பாடு ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர். இந்த முறைகேடு காரணமாக அரசுக்கு இரண்டரை இலட்சம் (250,000) ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரைக் கைது செய்வதற்காக ஐந்து பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவர் தற்போது தங்கியிருக்கும் இடத்தைக் கண்டறிய பொலிஸாரால் இதுவரை முடியவில்லை என்று ஒரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட ஜோஹான் பெர்னாண்டோ இன்று (31) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.