கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவை பணி இடைநீக்கம் செய்ய சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் பதில் செயலாளர் நேற்று (18) எழுத்து மூலம் இதனை அறிவித்துள்ளார். அனுமதியின்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குற்றச்சாட்டின் பேரிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், அரச மருத்துவ அதிகாரிகள் மன்றத்தின் (GMOF) தலைவராகவும் உள்ள ருக்ஷான் பெல்லன, தேசிய வைத்தியசாலையில் இடம்பெறும் பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்களை அம்பலப்படுத்தியதன் காரணமாக, பழிவாங்கும் நடவடிக்கையாக தன்னை பணி இடைநீக்கம் செய்யத் தயாராகி வருவதாக கடந்த வாரம் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.இந்த சம்பவம் குறித்து இன்று (19) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இது ஒரு பாரிய அநீதி என்று குறிப்பிட்டார். சுகாதாரத் துறையில் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் வெளிவரும் என்ற அச்சத்தின் காரணமாகவே அரசாங்கம் இந்த பணி இடைநீக்கத்தை மேற்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டினார்.
சுகாதாரப் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கு ஒரு வைத்தியருக்கு உள்ள உரிமையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மக்களின் வாழும் உரிமை ஆபத்தில் உள்ளதாகவும், புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் போது சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அடிப்படை உரிமைகள் அதில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, வைத்தியர் ருக்ஷான் பெல்லன தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலும் ஒரு பாரிய தகவலை வெளியிட்டுள்ளது. அண்மையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது, பிரதமர் ஹரினி அமரசூரிய இரவு நேரத்தில் அவரது உடல்நலத்தைப் பார்க்கச் சென்றதாக வெளியான பொய்யான செய்தியின் ஆதாரம் வைத்தியர் பெல்லன என்பது தெரியவந்துள்ளது. இந்த பொய்யான செய்தி ஹிரு ஊடக வலையமைப்பு மூலம் பரப்பப்பட்டதுடன், அதனை திருத்துமாறு பிரதமர் அலுவலகம் அறிவித்த போதும், சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனம் வைத்தியசாலை பேச்சாளர் அந்த தகவலை உறுதிப்படுத்தியதாக தெரிவித்திருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், பிரதமர், வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர், தாதியர் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது. விசாரணைகளில் பிரதமர் எந்த சந்தர்ப்பத்திலும் வைத்தியசாலைக்கு வரவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பொய்யான செய்தியை வெளியிட்ட ஊடக நிறுவனத்தின் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் சாட்சியமளிக்கும் போது, பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவே அந்த தகவலை உறுதிப்படுத்தியதாக தெரிவித்துள்ளனர். அதனுடன் தொடர்புடைய தொலைபேசி தரவுகள் மற்றும் நேரங்களையும் அவர்கள் சமர்ப்பித்துள்ளனர்.
இந்த வெளிப்படுத்தலின் அடிப்படையில், வைத்தியருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும், நீதிமன்றத்திற்கு விடயங்களை அறிவிக்கவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தயாராகி வருகிறது. அத்துடன், முன்னாள் ஜனாதிபதியின் வைத்தியசாலை அனுமதி தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு மிகைப்படுத்தி வழங்கியமை, மருத்துவ நெறிமுறைகளை மீறியமை மற்றும் நோயாளிகளின் இரகசியத்தன்மையைப் பாதுகாக்கத் தவறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சுகாதார அமைச்சு அவருக்கு எதிராக மேலும் ஒரு ஒழுங்கு விசாரணையையும் ஆரம்பித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை அமைப்பாளராகச் செயற்பட்டுள்ள வைத்தியர் பெல்லன, ஒரு மருத்துவ நிபுணரை விட அரசியல்வாதியாகவே செயற்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எவ்வாறாயினும், பிரதமரின் வைத்தியசாலை விஜயம் தொடர்பான சம்பவம் குறித்து அண்மையில் யூடியூப் அலைவரிசை ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், தனக்கும் அது ஒரு வதந்தியாகவே கிடைத்ததாகவும், தனக்குத் தெரிந்தவரை அது ஊடகங்களில் வெளியான ஒரு பொய் என்றும் கூறியிருந்தார்.
தனது பணி இடைநீக்கம் தொடர்பான கடிதத்தை வைத்தியர் பெல்லன வெளியிட்டிருந்தார், அது கீழே உள்ளது

Tags:
Trending