தனிப்பட்ட தகராறு: முடிதிருத்தும் தொழிலாளி கொடூரமாக கொலை

farmer-killed-over-personal-dispute

 வேலையை முடித்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த முடிதிருத்தும் தொழிலாளி ஒருவரை வழிமறித்து கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் மாத்தறை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. கடந்த 16ஆம் திகதி இரவு இடம்பெற்ற இந்த கொடூரமான குற்றத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான பொலிஸ் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் மாத்தறை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



இந்தச் சம்பவத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தவர் மாத்தறை, சோகன் தோட்டம் மேல் பிரிவைச் சேர்ந்த 41 வயதுடைய எஸ். சசிகுமார் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார். முடிதிருத்தும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த இவர்,


அன்றிரவு தனது வேலைகளை முடித்துவிட்டு, சோகன் தோட்டம் பகுதியில் நடைபெற்ற இறுதிச் சடங்கு ஒன்றிலும் கலந்துகொண்டு, மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, வழியில் மறைந்திருந்த கொலையாளியின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில், உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த தனிப்பட்ட தகராறே இந்தக் கொலைக்கு உடனடி காரணம் என தெரியவந்துள்ளது. மலபடை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் குற்றத்தைச் செய்த பின்னர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், தாக்குதலில் படுகாயமடைந்த சசிகுமார் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மாத்தறை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பா ஜயதிலக்கவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில், குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஈ.டி. உதயங்க உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்கான விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post