கடந்த 11ஆம் திகதி சப்புகஸ்கந்த, தெனிமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒரு சிறு குழந்தை உட்பட மூவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில், முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் சக்தி கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வலா அவர்களின் சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மஹர நீதவான் பண்டார இலகசிங்க நேற்று (19) பிற்பகல் உத்தரவிட்டார்.
சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினரை தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்திடம் சமர்ப்பித்து, அவர் வாகனம் ஓட்டுவதற்கான தகுதியை பரிசோதித்து, அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் இங்கு உத்தரவிட்டார்.
சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றும், எனவே அவர் சார்பாக ஒரு சட்டத்தரணி ஆஜராகி விடயங்களை முன்வைத்ததாகவும் நீதிமன்றத்தில் தெரியவந்தது. விபத்து நடந்த நேரத்தில் சந்தேகநபர் மதுபோதையில் இருந்தாரா என்பதை உறுதிப்படுத்த, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட இரத்த மற்றும் சிறுநீர் மாதிரிகள் அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பப்பட்டுள்ளன என்றும், ஆனால் அது தொடர்பான அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
விபத்தில் காலில் காயமடைந்த பெண்ணுக்கு 50,000 ரூபாவும், காயமடைந்த குழந்தைக்கும் தாய்க்கும் தலா 25,000 ரூபாவும் ஆரம்பத்திலேயே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சந்தேகநபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார். இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளதால், இழப்பீட்டுத் தொகை தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றாலும்,
முறைப்பாட்டாளர் தரப்பு சம்பந்தப்பட்ட நிவாரணத் தொகையைப் பெற விருப்பம் தெரிவித்தால், நீதிமன்றத்தில் அதற்கு எந்தத் தடையும் இல்லை என்று நீதவான் சுட்டிக்காட்டினார். இருப்பினும், காலில் பலத்த காயமடைந்த பெண்ணின் கணவர், அந்தத் தொகையைப் பெற தான் தயாராக இல்லை என்று நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து ஆராய்ந்த நீதவான், விபத்தில் எந்தத் தரப்பினர் காயமடைந்தனர் என்று பொலிஸாரிடம் விசாரித்தார். விபத்தில் முறைப்பாட்டாளர் தரப்பைச் சேர்ந்த மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை பொலிஸார் உறுதிப்படுத்திய நிலையில், அப்படியென்றால் காயமடையாத சந்தேகநபர் ஏன் இன்னும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று நீதவான் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி, தனது கட்சிக்காரரின் மோசமான உடல்நிலை காரணமாக அவர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்தார். விடயங்களை ஆராய்ந்த பின்னர், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.
Tags:
Trending