இலங்கைக்கு IMF இன் 206 மில்லியன் டொலர் துரித நிதி வசதிக்கு ஒப்புதல்!

imf-approves-sri-lanka-funding

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுச் சபை, இலங்கைக்கு துரித நிதி வசதி (Rapid Financing Instrument - RFI) திட்டத்தின் கீழ் 206 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்க தனது ஒப்புதலைத் தெரிவித்துள்ளது.




இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கையை பரிசீலிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை நேற்று (19) கூடியதன் பின்னரே இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 'தித்வா' சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களுக்குப் பிறகு நாடு எதிர்கொள்ளும் சவால்களுக்கு பதிலளிக்கும் வகையில் 200 மில்லியன் அமெரிக்க டொலர் துரித நிதி வசதியை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் இதற்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியிருந்தது.

இந்த புதிய நிதி வசதி, சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கு (Extended Fund Facility - EFF) மேலதிகமாக வழங்கப்படும் ஒன்றாகும். விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது ஆய்வு ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில், அதற்கு ஒப்புதல் அளிப்பதற்காக நிறைவேற்றுச் சபை கடந்த டிசம்பர் 15 ஆம் திகதி கூடவிருந்தது, ஆனால் துரித நிதி வசதிக்கான கோரிக்கை காரணமாக அந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.




அதன்படி, விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்காக IMF இன் ஒரு பணிக்குழு 2026 இன் முற்பகுதியில் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post