மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்துக்காக 10 'தாழ்தளப் பேருந்துகள்' கொண்டுவரப்படுகின்றன - பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த

10-low-floor-buses-to-be-brought-for-the-transportation-of-the-disabled-mp-sugath-wasantha

பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா அண்மையில் (03) ஹொரணையில் வைத்துத் தெரிவிக்கையில், 2026 ஆம் ஆண்டளவில் இந்நாட்டிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக சர்வதேச தரத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட 'தாழ்வான தள பேருந்துகள்' (Low Flow bus) பத்து தேசிய போக்குவரத்து சேவையில் இணைக்க எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார். மாற்றுத்திறனாளிகள் தொடர்பான உரிமைகள் சட்டமூலம் இந்த ஆண்டு நிறைவேற்றப்படும் என்றும், அணுகல் வசதிகள் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்றும் அவர் அங்கு குறிப்பிட்டார்.




அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், மாற்றுத்திறனாளிகள் தொடர்பான தேசிய கொள்கை இந்த ஆண்டுக்குள் தயாரிக்கப்பட்டு முடிக்கப்படும் என எதிர்பார்ப்பதாகக் கூறினார். இதன் இறுதி நோக்கம், உரிமைகளால் வலுவூட்டப்பட்ட மாற்றுத்திறனாளி குடிமகனை உருவாக்குவதாகும். பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார ரீதியாக ஒருங்கிணைந்த சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கௌரவமான வாழ்க்கையை வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள இந்த நேரத்தில், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக கணிசமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவுகள் பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், எந்தவித வரம்புகளும் இன்றி ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிற்கும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. காத்திருப்புப் பட்டியல்களில் காத்திருக்காமல், மாற்றுத்திறனாளிகள் உரிய கொடுப்பனவுகளுக்குப் பதிவுசெய்து அவற்றைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் இப்போது கிடைத்துள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு ஆதரவளிப்பதுடன், அவர்கள் இந்நாட்டின் சமூக பொருளாதார செயற்பாட்டில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட சம உரிமைகளைக் கொண்ட குடிமக்களாக மாற்றுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகத் வசந்த டி சில்வா மேலும் விளக்கினார்.




இருப்பினும், எதிர்க்கட்சிக்கு எந்தவொரு தொலைநோக்கு பார்வையோ அல்லது வேலைத்திட்டமோ இல்லாததால், அவர்கள் சிறிய விடயங்களைப் பிடித்துக்கொண்டு ஊடகங்கள் மூலம் மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்கள் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த குற்றம் சாட்டினார். ஆனால், இந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் எதிர்க்கட்சியின் இந்தச் செயல்களால் ஏமாற மாட்டார்கள் என்றும், அவர்கள் செய்த மற்றும் கூறிய விடயங்களை மக்கள் மறக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post