75 மில்லியன் சட்டவிரோத சொத்து வழக்கை தவிர்த்த விமலுக்கு பிடியாணை

wimal-weerawansa-arrested-court-avoid

75 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை முறைகேடாகச் சம்பாதித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மேலும், பிரதிவாதி சார்பில் ஆஜரான பிணைதாரர்களுக்கும் அடுத்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அறிவித்தல் வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.




2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அமைச்சராகப் பதவி வகித்தபோது முறைகேடாகப் பணத்தையும் சொத்துக்களையும் சம்பாதித்ததாகக் குற்றம் சாட்டி, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கின் மேலதிக விசாரணை 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி நடைபெறத் திகதியிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கிற்கு மேலதிகமாக, தேசிய சுதந்திர முன்னணிக்கு 40 அரச வாகனங்களை வழங்கி, அவற்றை முறைகேடாகப் பயன்படுத்தியதன் மூலம் அரசுக்கு 09 மில்லியன் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகவும் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால், கோட்டை நீதவான் நீதிமன்றம் முன்னாள் அமைச்சருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்திருந்தது.




இவ்வாறு பல குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் அமைச்சர், அண்மைய நாட்களில் நாட்டின் கவனத்தை ஈர்ப்பதற்காக சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டார். இது குறித்து அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ ஊடகவியலாளர் சந்திப்பில் 'சிலர் வழக்குத் திகதிகள் நெருங்கும்போது உண்ணாவிரதம் இருக்கிறார்கள்' என்று சூசகமாகத் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post