அனுராதபுரம் - பாதெனிய பிரதான வீதியில் கல்கமுவ, மீ ஓயா பிரதேசத்தில் லொறி ஒன்றில் மோதியதில் சுமார் இரண்டு வயதுடைய யானைக் குட்டி ஒன்று உயிரிழந்துள்ளது. இரவு நேரத்தில் உணவு தேடி வந்து மீண்டும் தேக்கு வனப்பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த யானைக் கூட்டம் ஒன்று, யானை - மனித மோதல்கள் அதிகமாகப் பதிவாகும் அலிகலே பிரதேசத்தில் கல்கமுவ பாலத்திற்கு அருகில் வீதியைக் கடக்க முயற்சித்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பாதெனியிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த லொறி யானைக் குட்டியுடன் மோதியவுடன் அந்த விலங்கு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், விபத்து நடந்த நேரத்தில் லொறியில் இரண்டு பேர் இருந்தபோதிலும் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், விபத்துக்குப் பிறகு சம்பந்தப்பட்ட லொறி நிற்காமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பிரதேசவாசிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த யானைக் குட்டியின் உடல் வீதியின் நடுவில் கிடந்ததைக் காணக்கூடியதாக இருந்ததுடன், கல்கமுவ வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். காட்டு யானைகள் அடிக்கடி நடமாடும் வீதிகள் வழியாகச் செல்லும்போது, குறிப்பாக இரவு நேரங்களில் மிகவும் அவதானமாக இருக்குமாறு வனவிலங்கு அதிகாரிகள் சாரதிகளிடம் தொடர்ச்சியாகக் கோரி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான காணொளிக் காட்சிகளும் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.