
பாணந்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு பெண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் இரண்டு மாணவிகளுக்கு வழிமறித்து நிர்வாணத்தைக் காட்டி பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில், நான்கு வருடங்களுக்குப் பிறகு ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விநியோகப் பிரிவில் கடமையாற்றும் இந்த சந்தேகநபர் பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. அன்றைய தினம் காலை குறித்த இரண்டு மாணவிகளும் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் காரில் வந்த ஒருவர் இந்தத் தொல்லையை ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் கார், இலங்கை பொலிஸாரால் களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் கணக்காளருக்கு வழங்கப்பட்ட வாகனம் என இலக்கத் தகடுகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அந்த ஆரம்ப தகவல்களின் அடிப்படையில், குறித்த மோட்டார் காரின் நிரந்தர சாரதியாக கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள், சம்பவம் நடந்த நாட்களிலேயே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர். இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விஞ்ஞானபூர்வ விசாரணைகள் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கைது செய்யப்பட்ட சாரதி குற்றம் நடந்த நேரத்தில் தனது தனிப்பட்ட மோட்டார் சைக்கிளில் ஹொரணை வீதியில் பயணித்துக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, சந்தேகநபரினதும் அவரது நண்பரும் தற்போதைய சந்தேகநபரான கான்ஸ்டபிளினதும் கையடக்கத் தொலைபேசி தரவுகளை பகுப்பாய்வு செய்தபோது, குற்றம் நடந்த நேரத்தில் இந்த இரண்டாவது சந்தேகநபர் பாணந்துறை நகர எல்லைக்குள் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் விசாரணை அறிக்கைகள் சட்டப் பிரிவின் ஊடாக சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், முதலில் கைது செய்யப்பட்ட அதிகாரியை வழக்கிலிருந்து விடுவித்து உண்மையான சந்தேகநபரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் செயற்பட்ட பாணந்துறை பொலிஸார், சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் பொலிஸில் சரணடைந்த பின்னர் அவரைக் கைது செய்துள்ளனர். பாணந்துறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சில்வா மற்றும் பாணந்துறை தெற்கு தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் உபுல் பிரியங்கர ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.