
6ஆம் தர ஆங்கிலப் பாடத்திட்டத்தில் ஏற்பட்ட சிக்கலான நிலைமை கண்டறியப்பட்டவுடன், அதன் விநியோகத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அந்தப் பாடத்திட்டம் மாணவர்களின் கைகளுக்குச் செல்லவில்லை என்றும் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட தவறு சரிசெய்யப்பட்டவுடன் அது குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட பிரதமர், அந்த விசாரணை அறிக்கைகள் கிடைத்தவுடன் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் வலியுறுத்தினார்.
ஏதேனும் ஒரு காரணத்தால், நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைக்கு அப்பால் ஒரு செயல் நடந்திருந்தால், அது குறித்தும், அதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பதையும் கண்டறியப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும், இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு முன்மொழியப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
6ஆம் தர மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடநூல் எதிர்வரும் ஜனவரி 21ஆம் திகதியும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடநூல் ஜனவரி 29ஆம் திகதியும் வழங்கப்படவுள்ளதால், இது குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் கோரிக்கை விடுப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
தேசிய கல்வி நிறுவனம் ஒரு தனிச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒரு நிறுவனம் என்பதால், அதன் விதிமுறைகளுக்கு இணங்க செயல்பட வேண்டும் என்றும், ஒழுங்குமுறை அதிகாரங்கள் தேசிய கல்வி ஆணைக்குழுவிடம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, ஆணைக்குழுவுடன் கலந்துரையாடிய பின்னரே முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விசாரணையின் வெளிப்படைத்தன்மை குறித்து யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என்றும், இது குறித்து மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றும் தெரிவித்த பிரதமர், உண்மையை வெளிக்கொணர்வதும், தவறு எப்படி நடந்தது என்பதைக் கண்டறிவதும் தனது நோக்கம் என்றும், விசாரணை முடிவுகள் கிடைத்தவுடன் அதை வெளிப்படுத்தி குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்தார்.