துபாயில் மறைந்திருந்து போதைப்பொருள் கடத்தலை இயக்கும் ஓஷத பெர்னாண்டோ என்ற 'டும்' என்ற பிரதான கடத்தல்காரரின் தந்தையான குருகுலசூரிய லசந்த பிரதீப் பெர்னாண்டோ நேற்று முன்தினம் (3) பிற்பகல் நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் வீதி மதிப்புள்ள 503 கிராம் ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 14 லட்சம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சாமர பிரதீப் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 49 வயதான சந்தேகநபர் கட்டுவபிட்டிய பிரதேசத்தில் வைத்து இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரின் மகனான 'டும்' என்ற போதைப்பொருள் கடத்தல்காரரால் மொத்தமாக வழங்கப்படும் ஹெரோயினை, அவர் அறிவிக்கும் இடங்களில் குறிப்பிட்ட அளவுக்கு சிறிய பொட்டலங்களாக மாற்றி வைப்பதே சந்தேகநபரின் பிரதான பணியாக இருந்துள்ளது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் பரிவர்த்தனைகளுக்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 12 வங்கி அட்டைகள், மூன்று கையடக்கத் தொலைபேசிகள், ஒரு சிறிய மின்னணு தராசு, ஒரு முச்சக்கர வண்டி மற்றும் ஒரு வேன் ஆகியவையும் சந்தேகநபரிடமிருந்து பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேகநபர் கட்டுவபிட்டிய வீதியில் உள்ள ஒரு வீட்டில் மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வாடகை அடிப்படையில் வசித்து இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.