மோட்டார் சைக்கிள் டிப்பருடன் மோதி பொலிஸ் அதிகாரி பலி

police-officer-dies-after-motorcycle-hits-tipper

கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நீதித்துறை பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கடந்த (30) ஆம் திகதி அதிகாலை மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். 




கடுவெல, போமிரிய, டட்லி குணசேகர மாவத்தைக்கு அருகில் அவரது மோட்டார் சைக்கிள் டிப்பர் ரதத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 40 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான பொலிஸ் கான்ஸ்டபிள் அரவிந்த சந்தருவன் (இலக்கம் 77855) ஆவார். இவர் மொரகல வீதி, பிலான, வஞ்சாவல பிரதேசத்தைச் சேர்ந்தவர். கடுவெல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இவர், தனது கடமைகளை முடித்துக்கொண்டு நண்பர் ஒருவரை வீட்டில் இறக்கிவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோதே இந்த விபத்துக்குள்ளானதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.




நவகமுவ பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்ததன்படி, உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் அரவிந்த சந்தருவன், 2026 ஜனவரி 01 ஆம் திகதி முதல் காலி பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் பெற்றிருந்த அதிகாரியாவார். அவர் 17 வருடங்களுக்கும் மேலாக கொழும்பு மாவட்டத்தில் கடமையாற்றியுள்ளார்.

விபத்து இடம்பெற்ற பின்னர், காயமடைந்த அதிகாரியை பிரதேசவாசிகள் நவகமுவ வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர். மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 30 ஆம் திகதி அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார். மரணம் தொடர்பான மரண பரிசோதனையை சட்ட வைத்தியர் துலாங்க பலல்ல மேற்கொண்டார். விபத்துடன் தொடர்புடைய டிப்பர் ரதத்தின் சாரதியை நவகமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்தவர். சந்தேகநபரான சாரதி கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார். நவகமுவ பொலிஸ் சார்ஜென்ட்கள் நிஹால் (இலக்கம் 51887) மற்றும் ரோஹித தலக்கல ஆகியோர் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post