காலி ஓல்காட் மாவத்தையில் நீண்டகாலமாக சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த மாட்டு இறைச்சிக் கூடத்தை சுற்றிவளைத்து, அதன் உரிமையாளர் உட்பட ஆறு பேர் பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பின் போது, கொல்லப்பட்ட மூன்று பசு மாடுகளினதும் நான்கு எருமை மாடுகளினதும் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த மாட்டு இறைச்சிக் கூடம் பொது சுகாதார பரிசோதகர் அல்லது கால்நடை வைத்தியரின் எவ்வித அனுமதியுமின்றி இரகசியமாக இயங்கி வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மனித நுகர்வுக்குப் பொருத்தமற்றது என சந்தேகிக்கப்படும் 2100 கிலோ மாட்டு இறைச்சியும் இங்கு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், விசாரணைகளில் இந்த நபர்கள் தென் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கு எருமை இறைச்சியை மாட்டு இறைச்சி என விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில், காலி, ஓல்காட் மாவத்தையைச் சேர்ந்த 33 வயதுடைய இறைச்சிக் கூடத்தின் உரிமையாளரான ஒரு வர்த்தகரும் அடங்குவதோடு, மொத்தமாக ஆறு பேர் இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.