வாகன நிறுத்துமிடப் பிரச்சினைக்குப் பிறகு ஒரு பெண்கள் குழு வந்து ஒரு ரிசார்ட்டை நாசப்படுத்தின.

resort-attack-over-parking

வாகனம் நிறுத்துவது தொடர்பான தகராறு முற்றிய நிலையில், மூன்று பெண்கள் உட்பட ஒரு குழுவினர் மோதர, செயின்ட் ஜேம்ஸ் வீதியில் அமைந்துள்ள ஒரு விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து தாக்குதல் நடத்திய சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த வன்முறைச் செயல் மற்றும் தாக்குதல் தொடர்பாக மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் மோதர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு 15, மோதர கோவில் வீதிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் பூஜை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் என்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.




இந்த மோதலுக்குக் காரணம், குறித்த விடுதிக்கு அருகில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்திற்கு வந்த ஒரு பெண் தனது காரை விடுதிக்கு இடையூறாக நிறுத்தியதுதான். இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கிருந்து சென்ற அந்தப் பெண், இரவு 11.30 மணியளவில் மேலும் சிலரை அழைத்துக்கொண்டு கார் மற்றும் முச்சக்கர வண்டியில் மீண்டும் வந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தடிகள் மற்றும் ஆயுதங்களுடன் விடுதிக்குள் பலவந்தமாக நுழைந்த இந்த கும்பல், அதன் உரிமையாளர், அவரது வழக்கறிஞர் மகன் மற்றும் ஊழியர்களைத் தாக்கியதுடன், கட்டிடத்தின் சொத்துக்களுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலின் போது விடுதி உரிமையாளருக்குச் சொந்தமான பணப்பைகள் திருடப்பட்ட நிலையில், பொலிஸாரால் அவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் வந்த கார் மற்றும் முச்சக்கர வண்டியும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.




சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களைத் தவிர, இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் சில நபர்களையும், வழக்கு பொருட்களையும் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. மோதர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.பி. ரத்நாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Post a Comment

Previous Post Next Post