வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நியூயோர்க்கில் உள்ள ஸ்டூவர்ட் விமான தேசிய பாதுகாப்பு முகாமில் காணப்பட்டனர். அங்கு அவர் அதிகாரிகளுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்த கைதுக்கு முன்னர், ஆகஸ்ட் 2025 முதல், அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் (CIA) ஒரு இரகசியக் குழு மாறுவேடத்தில் காரகாஸ் நகரின் வீதிகளில் தங்கியிருந்து
மதுரோவின் அன்றாட வழக்கங்கள், அவர் சந்திக்கும் நபர்கள் மற்றும் அவரது நாய்கள், பூனைகள் போன்ற செல்லப்பிராணிகளின் பழக்கவழக்கங்கள் கூட கண்காணிக்கப்பட்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டன. 2019 முதல் அமெரிக்க தூதரகம் மூடப்பட்டிருந்ததால், வெளி உதவி இல்லாமல் செயல்பட்ட இந்த முகவர்களுக்கு மதுரோவின் உள் வட்டத்தில் இருந்த ஒரு உளவாளியின் உதவி கிடைத்ததுடன், வானில் சுற்றித் திரிந்த ஸ்டெல்த் ட்ரோன்கள் மூலம் வீடியோக்களும் புகைப்படங்களும் எடுக்கப்பட்டன.2020 ஆம் ஆண்டு முதல் டொனால்ட் டிரம்ப் மதுரோவை போதைப்பொருள் கடத்தல்காரராக அறிவித்திருந்தார். வெனிசுலாவின் எண்ணெய் வளங்களையும் அரசியல் கட்டுப்பாட்டையும் கைப்பற்றும் நோக்கில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. மதுரோவைப் பிடிக்க அமெரிக்காவின் சிறப்பு டெல்டா படைப் பிரிவு பயன்படுத்தப்பட்டதுடன்,
கென்டக்கியில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் முழு அளவிலான மாதிரி உருவாக்கப்பட்டு, 'ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்' என்ற பெயரில் ஒத்திகைகள் நடத்தப்பட்டன. இதில் எஃகு கதவுகளை உடைப்பது மற்றும் இருட்டில் நகர்வது குறித்து கமாண்டோ வீரர்கள் பயிற்சி பெற்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரோ 6-8 இடங்களுக்கு இடையில் மாறி மாறி தங்கியிருந்ததால், அவர் இருக்கும் சரியான இடத்தைக் கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது.
தாக்குதலைத் தொடங்குவதற்கு முன், அமெரிக்கா அப்பகுதியில் போர் விமானங்கள், மின்னணு போர் கப்பல்கள் மற்றும் ட்ரோன்களின் திறனை அதிகரித்தது. கிறிஸ்துமஸ் விடுமுறை மற்றும் மோசமான வானிலை காரணமாக இந்த நடவடிக்கை தாமதமாகி, இறுதியாக ஜனவரி 3, 2026 அன்று இரவு தொடங்கப்பட்டது. புளோரிடாவில் உள்ள மார்-அ-லாகோவில் இருந்து இந்த நடவடிக்கையை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் போல நேரலையில் பார்த்த டிரம்ப், இரவு 10:46 மணிக்கு இறுதி ஒப்புதலை வழங்கினார். காரகாஸ் நகரில் சைபர் தாக்குதல் மூலம் மின்சாரம் துண்டிக்கப்பட்டவுடன் தொடங்கிய இந்த நடவடிக்கையில், 150க்கும் மேற்பட்ட விமானங்கள் பயன்படுத்தப்பட்டு, ரேடார் அமைப்புகள் மற்றும் ரேடியோ கோபுரங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
கடல் மட்டத்திலிருந்து 100 அடி போன்ற மிகக் குறைந்த உயரத்தில் பறந்த ஹெலிகாப்டர்கள் மூலம் டெல்டா படை வீரர்கள் மதுரோ தங்கியிருந்த புவேர்ட்டே டியூனா இராணுவ முகாமில் தரையிறங்கினர்.
அங்கு இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. அதிகாலை 2:01 மணியளவில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்த அமெரிக்கப் படையினர், 3 நிமிடங்களுக்குள் கட்டிடத்திற்குள் நுழைந்து, பாதுகாப்பான அறைக்கு தப்பிச் செல்ல முயன்ற மதுரோவையும் அவரது மனைவியையும் கைது செய்ய முடிந்தது. அந்த பாதுகாப்பான அறையின் கதவு மிகவும் தடிமனாக இருந்தபோதிலும், அவர்களால் அதை மூட முடியவில்லை என்று டிரம்ப் பின்னர் தெரிவித்தார்.
அதிகாலை 3:29 மணியளவில் அமெரிக்கப் படையினர் மதுரோவை வெனிசுலாவிலிருந்து அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் குவாண்டானாமோ பே வழியாக நியூயோர்க்கிற்கு கொண்டு செல்லப்பட்டு புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நடவடிக்கையில் 40 வெனிசுலா வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டனர், மேலும் 6 அமெரிக்க வீரர்கள் காயமடைந்தனர். டிரம்ப், வெனிசுலாவின் துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிகஸை இடைக்கால ஜனாதிபதியாக நியமித்து, நாட்டின் கட்டுப்பாட்டை அமெரிக்கா எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். சர்வதேச சட்டத்தின் கீழ் இது ஒரு சட்டவிரோத ஆக்கிரமிப்பு என்று சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.