வெனிசுலாவில் அண்மையில் ஏற்பட்டுள்ள சம்பவங்கள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து இலங்கை அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகவும், அங்கு நடப்பவற்றை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு இன்று (2026 ஜனவரி 05) ஓர் அறிக்கையை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சாசனத்திற்கு இணங்க செயற்படுவதன் முக்கியத்துவத்தை இலங்கை இங்கு விசேடமாக வலியுறுத்துகிறது. குறிப்பாக, பலத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது, பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது, சர்வதேச தகராறுகளை சமாதானமான முறையில் தீர்த்துக்கொள்வது மற்றும் நாடுகளின் இறைமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளிப்பது போன்ற கோட்பாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெனிசுலா மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் அத்துடன் அப்பிரதேசத்தின் ஸ்திரத்தன்மை குறித்து இலங்கை அரசாங்கம் மிகுந்த அக்கறை காட்டுவதாக அமைச்சு சுட்டிக்காட்டுகிறது. மோதல்களைத் தீவிரப்படுத்துவதற்குப் பதிலாக, பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வொன்றை எட்டுவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் அரசாங்கம் கோருகிறது.
இந்த முக்கியமான தருணத்தில், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் பாதுகாப்புச் சபை போன்ற நிறுவனங்கள் இந்த நிலைமை குறித்து உடனடியாக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. வெனிசுலா மக்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் இறைமை உரிமைகளைக் கருத்தில் கொண்டு அமைதியான தீர்வொன்றை எட்டுவதற்கான நடவடிக்கைகள் காலத்தின் தேவையாகும் என்று வெளிவிவகார அமைச்சு மேலும் வலியுறுத்துகிறது.