இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோருக்கு பொலிஸின் பல்வேறு விசாரணைப் பிரிவுகள் முன் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாமல் ராஜபக்ஷ எம்.பி. இன்று (26) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினராகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தார பத்மே’ என்பவருடன் தொடர்புகளைப் பேணியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி அம்மையார் ஷிரந்தி ராஜபக்ஷ நாளை (27) பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சிரிலிய சவிய’ அமைப்பை நடத்தி நிதி மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.
குறிப்பாக, கொழும்பில் மியூசியஸ் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள ஒரு வீட்டை வாங்கிய சம்பவம் தொடர்பில், லஞ்சம், ஊழல் மற்றும் விரயத்திற்கு எதிரான அமைப்பு, லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு ஒன்றையும் சமர்ப்பித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதியிடப்பட்ட பத்திரத்தின் மூலம் இந்த வீட்டை வாங்கும் போது, சிரிலிய கணக்கில் இருந்த 350 இலட்சம் ரூபாய் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இது ஒரு ஊழல் நிறைந்த கொடுக்கல் வாங்கல் என்பதால் முறையான விசாரணை நடத்துமாறு அந்த அமைப்பு கோரியுள்ளது.