வீட்டு வாடகைச் சட்டத் திருத்தங்களுக்கான பொதுமக்கள் கருத்துகள் மார்ச் 04 வரை.

public-consultation-for-changes-in-house-rent-act-till-march-04

1972 ஆம் ஆண்டு இலக்கம் 07 கொண்ட வீடமைப்பு வாடகைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் மற்றும் குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக வழங்கப்பட்டிருந்த காலக்கெடுவை எதிர்வரும் மார்ச் மாதம் 04 ஆம் திகதி வரை மேலும் நீடிக்க நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.




சம்பந்தப்பட்ட சட்டமூலங்கள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பும் தரப்பினர் இருந்தால், அவர்களது எழுத்துமூலமான கருத்துக்களையும், யோசனைகளையும் உடனடியாக அமைச்சுக்கு சமர்ப்பிக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி ஆயிஷா ஜினசேன அம்மையார் கோரியுள்ளார். பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து பெறப்படும் இந்த எழுத்துமூலமான கருத்துக்களை ஆராய்வதற்காக அமைச்சின் மேலதிக செயலாளர் (சட்டம்) தலைமையில் ஒரு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், அக்குழுவினால் சம்பந்தப்பட்ட விடயங்கள் பரிசீலிக்கப்படவுள்ளன.

நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட இந்த இரண்டு சட்டமூலங்களும் முறையான நடைமுறையைப் பின்பற்றி கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டன. அதன் பின்னர், 2025 நவம்பர் 04 ஆம் திகதி முதல் 2026 ஜனவரி 15 ஆம் திகதி வரை அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் பத்திரிகைகள் மூலம் பொதுமக்களின் கருத்துக்கள், யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதற்கு விளம்பரம் செய்யப்பட்டிருந்ததாக அமைச்சு குறிப்பிடுகிறது.




அத்துடன், 2025 அக்டோபர் 27 ஆம் திகதி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு கடிதம் அனுப்பி, இந்த புதிய சட்டங்கள் தொடர்பான அவர்களது பரிந்துரைகளையும், யோசனைகளையும் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டுகிறார். எவ்வாறாயினும், ஆரம்பத்தில் வழங்கப்பட்ட காலப்பகுதிக்குள் இந்த சட்டமூலங்கள் தொடர்பாக இரண்டு எழுத்துமூலமான கருத்துக்கள் மட்டுமே பெறப்பட்டிருந்ததாக அமைச்சு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த வரைவுச் சட்டமூலங்கள் குறித்து விரிவாக கருத்து தெரிவிக்க கால அவகாசம் தேவை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடந்த ஜனவரி 29 ஆம் திகதி எழுத்துமூலம் அறிவித்துள்ளதுடன், மேலும் பல அமைப்புகளும் இது தொடர்பாக கால அவகாசம் கோரியுள்ளன. இந்த கோரிக்கைகள் குறித்து கவனம் செலுத்திய பின்னர், பெப்ரவரி 03 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி சட்டத்தரணி ஆயிஷா ஜினசேன அம்மையார் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post