பொரலெஸ்கமுவவில் வயதான தம்பதியினரை பராமரிக்க வந்த ஊழியர் 13 லட்சம் ரூபாவை திருடிச் சென்றுள்ளார்

the-worker-who-came-to-take-care-of-the-old-couple-in-boralasgamuwa-collected-13-lakhs

பொரலஸ்கமுவ பரோபகார மாவத்தையில் அமைந்துள்ள ஒரு வீட்டில் வசிக்கும் 82 மற்றும் 85 வயதுடைய முதிய தம்பதியினரை பராமரிப்பதற்காக வந்த ஒரு பராமரிப்பு சேவை நிறுவனத்தின் ஊழியர், அந்த வீட்டிலிருந்து பதின்மூன்றரை இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடி தப்பிச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பன்னிரண்டாயிரம் ரூபாயையும் திருடி ரத்தனப்பிட்டிய பிரதேசத்தில் மறைந்திருந்தபோது கடந்த 01ஆம் திகதி பொரலஸ்கமுவ பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.




கொஸ்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய இந்த நபர் ஒரு தனியார் பராமரிப்பு சேவை நிறுவனம் மூலம் கடந்த டிசம்பர் மாதம் 03ஆம் திகதி குறித்த தம்பதியினரை பராமரிப்பதற்காக சேவைக்கு வந்துள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர். சந்தேகநபரின் கடந்தகால தகவல்களை விசாரித்தபோது, இவர் இதற்கு முன்னர் ஹெரோயின் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் 11 தடவைகள் சிறையில் இருந்துள்ளார் என்பதும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக கடந்த டிசம்பர் 07ஆம் திகதி வீட்டு உரிமையாளர்கள் அளித்த முறைப்பாட்டின் பேரில் செயற்பட்ட பொலிஸார், விசாரணைகளை ஆரம்பித்து சந்தேகநபரை தேடி அவரது கொஸ்கொடவில் உள்ள வீட்டை சோதனையிட்டபோது, அவர் ஏற்கனவே வீட்டிலிருந்து தப்பிச் சென்றிருந்தார். இதற்கிடையில், பொலிஸார் தன்னை பின்தொடர்வதை உணர்ந்த சந்தேகநபர், தான் திருடிய அனைத்து தங்க நகைகளையும் நாராஹேன்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ஒரு கூரியர் சேவை நிறுவனம் மூலம் கடந்த 24ஆம் திகதி மீண்டும் முறைப்பாட்டாளரின் வீட்டிற்கே கிடைக்கச் செய்துள்ளதாகவும், அந்த பொருட்கள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




சந்தேகநபரை கைது செய்வதற்காக தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்ட பொரலஸ்கமுவ பொலிஸார், ரத்தனப்பிட்டிய பிரதேசத்தில் அவரை கைது செய்ய முடிந்ததுடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் குறித்த திருட்டை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post