முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, வாக்குமூலம் அளிப்பதற்காக சற்று நேரத்திற்கு முன்னர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு (FCID) வருகை தந்தார். இன்று (03) பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு முன்னர் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய அவர் இவ்வாறு வருகை தந்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நடத்தப்பட்ட 'சிரிலிய' கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்கு வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார். குறிப்பாக, இந்த 'சிரிலிய' வங்கிக் கணக்கைத் திறக்கும்போது, அதற்கான தேசிய அடையாள அட்டை எண்ணாக '222222222V' என்ற எண் பயன்படுத்தப்பட்டதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முன்னதாக கடந்த 27ஆம் திகதி வாக்குமூலம் அளிப்பதற்காக வருமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அன்றைய தினம் வர முடியாது என்பதால் இரண்டு வார கால அவகாசம் வழங்குமாறு சட்டத்தரணி ஊடாக அவர் கோரிக்கை விடுத்திருந்தார். எவ்வாறாயினும், குறித்த கோரிக்கையை உறுதிப்படுத்த மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால், இன்று கட்டாயமாக ஆஜராகுமாறு பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு மீண்டும் அவருக்கு அறிவித்திருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஆரம்பித்ததுடன், வசீம் தாஜுதீன் கொலை விசாரணைகளின் போது 'சிரிலிய' அமைப்புக்கு வழங்கப்பட்ட டிஃபென்டர் வாகனம் தொடர்பாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. 2015 ஜூன் 01ஆம் திகதி இந்த விசாரணை தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பெறச் சென்றபோது, விசாரணை அதிகாரிகளுக்கு அப்போதைய சபாநாயகர் சாமல் ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் செல்ல நேர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவும் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளார்.