போலி தகவல்களைப் பயன்படுத்தி நாட்டிலிருந்து தப்பிச் சென்று வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இருபத்தாறு பேர் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க போதரகம குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார். வேறு நபர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஊடாக கடவுச்சீட்டுகளைப் பெற்று இவர்கள் இவ்வாறு நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (26) நீதிமன்றத்தில் தகவல்களை சமர்ப்பித்தனர். அப்போது, விசாரணையில் உள்ள இருபத்தாறு சந்தேகநபர்களில் இருவரின் விசாரணை முன்னேற்றம் மட்டுமே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறித்து பிரதான நீதவான் இரகசியப் பொலிஸாரிடம் கேள்வி எழுப்பினார்.
இதன்போது, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திலிருந்து பெறப்பட்ட சில கைரேகை அறிக்கைகள் பரிசோதனைக்காக கைரேகை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதுவரை இரண்டு அறிக்கைகள் மட்டுமே பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர். இருப்பினும், சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேகநபர்களின் கைரேகை அறிக்கைகள் தொடர்பான தகவல்கள் கோரப்பட்டுள்ளதா என நீதவான் வினவியபோது, அனைத்து அறிக்கைகளும் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டு விசாரணைகள் துரிதப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் விசாரித்த பின்னர், தப்பி ஓடிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் தொடர்பான விசாரணைகளை விரைவாக முடித்து நீதிமன்றத்திற்கு அறிக்கையிடுமாறு நீதவான் இரகசியப் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். அதன்படி, இந்த விசாரணையின் அடுத்தகட்ட முன்னேற்றம் எதிர்வரும் மே மாதம் 04ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.