
இலங்கை சுதந்திரக் கட்சியின் (இ.சு.க) அரசியல் சபை, கட்சியின் முடிவுக்கு மாறாக பல உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்த அதன் ஒன்பது உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. கட்சியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நேற்று (19) இதனைத் தெரிவித்தார்.
இந்தத் தீர்மானம் நேற்று (19) மாலை கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில், இ.சு.க தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற அரசியல் சபை கூட்டத்தின்போதே எடுக்கப்பட்டது.சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தற்போதைய "மாலிமா" அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். இதேவேளை, இலங்கை சுதந்திரக் கட்சியின் மே தினப் பேரணி பொரளை கெம்பல் மைதானத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு கொழும்பு மாநகர சபையின் அனுமதியைப் பெறுவதற்காக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை சுதந்திரக் கட்சி மகளிர் முன்னணி ஏற்பாடு செய்யும் கொண்டாட்ட நிகழ்வொன்றை கண்டி நகரில் நடத்தவும் இங்கு தீர்மானிக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரி மேலும் தெரிவித்தார். இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க உட்பட அரசியல் சபை உறுப்பினர்கள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.