பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவின் பராத்த பிரதேசத்தில் நடத்தப்பட்டு வந்த மலர்சாலையின் உரிமையாளரும் அவரது தாயும் சுமார் 21 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த நிலையில் கடந்த 25ஆம் திகதி சட்டத்தின் பிடியில் சிக்க வைப்பதற்கு பாணந்துறை வடக்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் குறித்த மலர்சாலையை நடத்தி வந்த 39 வயதுடைய ஒருவரும் அவரது 59 வயதுடைய தாயுமாவர்.
சவப்பெட்டிகளுக்குள் போதைப்பொருட்களை மறைத்து கடத்தும் போது எவரும் பரிசோதனை செய்யாததால், இந்த உத்தியைப் பயன்படுத்தி கடத்தலை மேற்கொண்டுள்ளனர். இந்த சந்தேகநபர்கள் மலர்சாலையில் பணிபுரியும் நபர்களையும் பயன்படுத்தி நீண்ட காலமாக மிகவும் சூட்சுமமான முறையில் இந்த போதைப்பொருள் கடத்தலை நடத்தி வந்துள்ளது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அப்போது பொலிஸாருக்கு வெளிப்படுத்தப்பட்ட மிகவும் ஆச்சரியமான விடயம் என்னவென்றால், மலர்சாலை உரிமையாளர் தனது ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குவதற்கு பதிலாக ஹெரோயின் போதைப்பொருளை வழங்கியுள்ளார் என்பதாகும்.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் மொத்த மதிப்பு சுமார் பத்து இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள் கடத்தல் மூலம் சந்தேகநபர் சட்டவிரோதமாக சொத்துக்களை சம்பாதித்துள்ளாரா என்பது குறித்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபரான தாயும் மகனும் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் மேலும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ஒரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.