சக்திவாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும், பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான 'பொடி லெசி' என்ற அரும்மாஹந்தி ஜனித் மதுசங்க டி சில்வா, இன்று (27) அதிகாலை இந்தியாவின் மும்பை நகரிலிருந்து பலத்த பாதுகாப்புடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இரு அதிகாரிகள் அடங்கிய விசேட பொலிஸ் குழுவினால், இலங்கை எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL 142 விமானம் மூலம் சந்தேகநபர் அதிகாலை 5.55 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
தென் மாகாணத்தின் மீட்டியாகொட மற்றும் அம்பலாங்கொட பிரதேசங்களில் இடம்பெற்ற பல கொலைகள் உட்பட பல குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர்களில் இவரும் ஒருவர். கடந்த 2024 டிசம்பர் 09 ஆம் திகதி பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தினால் கடுமையான நிபந்தனைகளின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், அவர் அந்த நிபந்தனைகளை மீறி கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு தப்பிச் சென்று அங்கு மறைந்திருந்தார். அதன்படி, பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணைக்கு அமைய செயற்பட்ட இலங்கை பொலிஸார், இந்திய அதிகாரிகளுடன் மேற்கொண்ட நேரடி தகவல் பரிமாற்றம் மற்றும் இராஜதந்திர தலையீட்டின் விளைவாக, கடந்த 2025 ஜனவரி மாதம் மும்பையில் இந்த சந்தேகநபரை கைது செய்ய முடிந்தது.
நாடுகளுக்கிடையேயான பரஸ்பர நம்பிக்கை, நாடுகடத்தல் சட்டங்கள் மற்றும் குடிவரவு, குடியகல்வு சட்டங்களைப் பயன்படுத்தி, பொது பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ்மா அதிபரின் நேரடித் தலையீட்டின் பேரில் இந்த நாடுகடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக சந்தேகநபர் காலி மாவட்ட குற்றப் பிரிவிலும், எல்பிட்டிய விசேட விசாரணைப் பிரிவிலும் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், அவரது குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் வலைப்பின்னல்கள் தொடர்பில் அங்கு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள எல்பிட்டிய பொலிஸ் நிலையத்தைச் சுற்றி தற்போது விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப். யூ. வூட்லர் தெரிவித்தார்.
போதைப்பொருள் தேவை மற்றும் விநியோகத்தை முடக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 'நாடு ஒன்றாக - தேசிய பணி' திட்டத்தின் ஒரு விசேட படியாக, நீதிமன்றத்தை தவிர்த்து வெளிநாடுகளில் மறைந்திருக்கும் குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஒரு வலுவான பொறிமுறை தற்போது அமுலில் உள்ளது. இந்த அரச பொறிமுறையின் ஊடாக 2024, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் மட்டும் சர்வதேச பொலிஸ் சிவப்பு அறிவித்தல்கள் மூலம் 29 சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இன்று அழைத்து வரப்பட்ட சந்தேகநபர் உட்பட, சிவப்பு அறிவித்தல்கள் இல்லாமல் வேறு நாடுகளில் குடிவரவு, குடியகல்வு சட்டங்களை மீறியதன் மூலம் நாடுகடத்தப்பட்ட சந்தேகநபர்களின் எண்ணிக்கை 14 ஆகும். மேலும், 89 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு சிவப்பு அறிவித்தல்கள் பெறப்பட்டுள்ளன. 2026 ஆம் ஆண்டிற்குள் அவர்களையும் விரைவாக சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வர அதிகபட்ச முயற்சி எடுக்கப்படும் என அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.