அக்குரேகொட இராணுவத் தலைமையகத்திற்கு அருகிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடி வாகன நிறுத்துமிடத்தில் சட்டத்தரணி கயான் புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்கியதாகக் கூறப்படும் 'பன்னிப்பிட்டிய ஜனக' என்பவர் மேற்கு தென் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 22ஆம் திகதி இரவு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் துபாய்க்கு தப்பிச் சென்றுள்ள 'மல்வானே டுட்டு' என்பவரின் ஐஸ் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் என பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
இவரால் கொலை செய்ய வந்த பாதாள உலக துப்பாக்கிதாரிகள் இருவருக்காக கொட்டாவ மற்றும் பன்னிப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் இரண்டு ஹோட்டல் அறைகள் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டிருந்தன.இந்த இரட்டைக் கொலைக்காக வந்த துப்பாக்கிதாரிகளில் ஒருவர் அம்பலாங்கொடை தெல்துவ பிரதேசத்தில் உள்ள கறுவா தோட்டத்தில் முன்னர் கைது செய்யப்பட்ட 'பத்தேகம களு' என்ற புனைப்பெயரால் அறியப்படும் முன்னாள் இராணுவ வீரர் ஆவார். அவர் குற்றத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் பன்னிப்பிட்டியிலுள்ள ஹோட்டலுக்கு வந்துள்ளார், ரத்னபுர பிரதேசத்தைச் சேர்ந்த மற்றைய பாதாள உலக துப்பாக்கிதாரி இரண்டு நாட்களுக்கு முன்னர் கொட்டாவிலுள்ள ஹோட்டலுக்கு வந்துள்ளார். இதற்கு முன்னர் ஒருபோதும் சந்தித்திராத இந்த இரண்டு துப்பாக்கிதாரிகளும் ஹோட்டல் அறைகளில் தங்கியிருந்து தொலைபேசி மூலம் கொலைத் திட்டம் குறித்து கலந்துரையாடியுள்ளனர். ஐஸ் போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையாகியுள்ள பத்தேகம களு என்பவர் ஹோட்டலில் தங்கியிருந்த மூன்று நாட்களிலும் தொடர்ச்சியாகவும், குற்றத்தைச் செய்வதற்கு சற்று முன்னரும் போதைப்பொருளைப் பயன்படுத்தியுள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த கொலை ஒப்பந்தம் மல்வானே டுட்டு மற்றும் கரந்தெனிய சுத்தா ஆகியோரால் வழங்கப்பட்டுள்ளது. இறந்த சட்டத்தரணி புத்திக இதற்கு முன்னர் கரந்தெனிய சுத்தாவின் சட்டத்தரணியாக செயற்பட்டுள்ளார், பின்னர் அவர் திடீரென 'லொக்கு பெட்டி' என்ற பாதாள உலக தலைவருக்காக ஆஜரானது இந்த கொலைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. தனது அனைத்து இரகசியங்களையும் சட்டத்தரணி லொக்கு பெட்டியிடம் வெளிப்படுத்துவார் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த குற்றம் இயக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டத்தரணியின் மனைவி இந்த இரகசியங்களை அறிந்திருப்பதால், அவரது உயிர் தப்பினால் தகவல்கள் வெளிவரும் என்ற பயத்தில் அவரையும் கொலை செய்ய வேண்டும் என்றும், காரில் வேறு யாராவது இருந்தால் அவர்களையும் அழிக்க வேண்டும் என்றும் கரந்தெனிய சுத்தா பத்தேகம களுவுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
குற்றத்தைச் செய்த பத்தேகம களு மற்றும் அதை இயக்கிய கரந்தெனிய சுத்தா ஆகிய இருவரும் இராணுவத்தில் பணியாற்றியுள்ளனர், கரந்தெனிய 'ஹிதஹொண்ட டொக்டர்' கொலை தொடர்பாக சுத்தா விளக்கமறியலில் இருந்தபோது களுவும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது அவர்களுக்கு இடையே ஒரு வலுவான நட்பு உருவானது. கரந்தெனிய சுத்தா துபாய்க்கு தப்பிச் சென்ற பின்னரும் இந்த உறவு தொடர்ந்தது. பத்தேகம களுவின் மகளின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு பணம் இல்லாமல் இருந்தபோது கரந்தெனிய சுத்தா அவருக்கு ஒன்றரை இலட்சம் ரூபாயை வழங்கியுள்ளார். அந்தப் பணம் திரும்பத் தேவையில்லை என்றும், அதற்குப் பதிலாக தனக்கு ஒரு உதவி செய்யுமாறு சுத்தா விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்து, அந்த உதவியை ஒருபோதும் மறக்க முடியாது என்று கூறி களு இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டார்.
திட்டமிட்டபடி, T-56 தானியங்கி துப்பாக்கியுடன் ஆயுதம் ஏந்தியிருந்த பத்தேகம களு மற்றும் பிஸ்டலுடன் வந்த மற்ற துப்பாக்கிதாரி, சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி இருந்த காரை நோக்கி திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தி இருவரையும் கொலை செய்துள்ளனர். அதன் பின்னர் பத்தேகம களு, கரந்தெனிய சுத்தா மற்றும் மல்வானே டுட்டு ஆகியோருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து இருவரையும் அழித்துவிட்டதாகவும், காரில் வேறு யாரும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். உடனடியாக சுத்தா, களுவுக்கு ஒரு இலட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார், பொலிஸாரிடம் சிக்காமல் எங்காவது மறைந்திருக்குமாறும், எதிர்காலத்தில் மேலும் பணம் அனுப்புவதாகவும் கூறியுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தற்போது தெரியவந்துள்ளது.