அவுஸ்திரேலியாவில் வேலைவாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி சட்டவிரோதமாக பண மோசடி செய்த இரண்டு இளைஞர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவுக்குச் சொந்தமான பொலிஸ் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (12) கண்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கண்டி நகரை மையமாகக் கொண்டு வீசா ஆலோசனை நிலையத்தை நடத்தி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தக் கைதுக்கு கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரால் பணியகத்திற்கு அனுப்பப்பட்ட முறைப்பாடே அடிப்படையாக அமைந்தது. 'EGA Visa Consultancy' என்ற நிறுவனத்தின் மூலம் அவுஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதியளித்து, சம்பந்தப்பட்ட இளைஞர்கள் 35 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளனர். உறுதியளித்தபடி வேலைவாய்ப்பை வழங்காத காரணத்தினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று சம்பந்தப்பட்ட நிறுவனத்தை சுற்றிவளைக்க பணியகத்தின் விசாரணை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அந்த சுற்றிவளைப்பின் போது, இந்த நிறுவனம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் எந்தவொரு செல்லுபடியான உரிமத்தையும் பெறாமல், வீசா ஆலோசனை நிறுவனம் என்ற போர்வையில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்துள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கம்பளை மற்றும் தலத்துஓயா பிரதேசங்களைச் சேர்ந்த 23 வயதுடைய இரண்டு இளைஞர்கள் ஆவர். சுற்றிவளைப்பு நடத்தப்பட்ட இடத்தில் இருந்து 7 வெளிநாட்டு வேலை ஒப்பந்தங்கள், 5 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் பணம் பெற்றதற்கான ஆதாரங்களை வழங்கும் பற்றுச்சீட்டுப் புத்தகங்களும் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான இரண்டு இளைஞர்களும் இன்று (13) கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தனர். மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்சவின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதில் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.பி. ஆரியசிங்க, பொலிஸ் பரிசோதகர் டி.பி. டி அல்விஸ், பொலிஸ் சார்ஜன்ட் மாரசிங்க ஆகிய அதிகாரிகளுடன் பணியகத்தின் கண்டி மாகாண அலுவலகத்தின் இரண்டு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.