
தொழில் மற்றும் தொழில்முனைவோர் பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்கவின் பெயரைப் பயன்படுத்தி, 'தித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக என்று கூறி உதவிகளையும் பணத்தையும் திரட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பிலிமத்தலாவ பிரதேசத்தில் உள்ள ஒரு விகாரையின் பிக்குவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா பிணை வழங்கியுள்ளார். நாராஹென்பிட்டி மத்திய குற்றவியல் ஊழல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தம்மாலங்கார என்ற இந்த சந்தேக நபரான பிக்குவை, தலா பத்து லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதவான் நேற்று (26) உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்து பொலிஸார் தெரிவித்ததாவது, இந்த சந்தேக நபர் தனது கையடக்கத் தொலைபேசி எண்களையும் வட்ஸ்அப் கணக்குகளையும் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக் கூறி இந்த பண மோசடியைச் செய்துள்ளார். தற்போது சந்தேக நபரான பிக்குவின் வங்கிக் கணக்கில் ஆறு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் வைப்பிலிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன், இவருக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மற்றொரு பண மோசடி தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர். அந்த முறைப்பாடு தொடர்பில் சந்தேக நபர் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாலும், இந்த சம்பவத்தின் விசாரணைகள் இன்னும் முடிவடையாததாலும், அவரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரினர்.
எவ்வாறாயினும், பிரதிவாதி கூண்டில் இருந்து கருத்து தெரிவித்த சந்தேக நபரான பிக்கு, தான் எந்தவிதமான மோசடியையும் செய்யவில்லை என்று கூறி அந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார். தனக்குச் சொந்தமான கையடக்கத் தொலைபேசி சிம் கார்டை வேறொருவருக்கு வழங்கியிருந்ததாகவும், தற்போது வெளிநாட்டில் உள்ள அந்த நபர் சம்பந்தப்பட்ட பணத்தை தனது வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளதாகவும் சந்தேக நபர் அங்கு தெரிவித்தார். இவ்வாறு முன்வைக்கப்பட்ட இரு தரப்பு விடயங்களையும் பரிசீலித்த பின்னர், சந்தேக நபரான பிக்குவுக்கு பிணை வழங்க தீர்மானித்த மேலதிக நீதவான், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்வரும் ஜூன் மாதம் 25 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸாருக்கு மேலும் உத்தரவிட்டார்.