பொலிஸ் காதல் தகராறு தொடர்பில் மாக்கந்துரே மதுஷின் மனைவி கைது

makandure-madushs-wife-arrested-for-police-love-dispute

சட்டவிரோதக் கும்பல் தலைவரான மாக்கந்துரே மதுஷின் கடைசி கால மனைவியாகக் கருதப்படும் காயனி முத்துமாலி மற்றும் அவரது மூத்த மகன் உட்பட ஏழு பேர் மகரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காயனி முத்துமாலி நெருங்கிய உறவு வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளை வேனில் கடத்திச் சென்று தாக்கிய சம்பவத்தின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.




தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரி கடந்த 4ஆம் திகதி காலி முகத்திடல் மைதானத்திற்கு அருகிலுள்ள வீதியில் சென்று கொண்டிருந்தபோது, கருப்பு நிற வேனில் வந்த குழுவினர் அவரை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடத்திய பின்னர் அவரது முகத்தை மூடி, வேனுக்குள்ளேயே தாக்கிய அந்தக் குழுவினர், காயமடைந்த கான்ஸ்டபிளை மகரகம ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள ஒரு விகாரைக்கு அருகில் விட்டுச் சென்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

மாக்கந்துரே மதுஷின் மரணத்திற்குப் பிறகு அவரது மனைவியுடன் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கொண்டிருந்த நட்பு குறித்து அவரது மூத்த மகன் கடும் எதிர்ப்புடனும் கோபத்துடனும் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தக் கான்ஸ்டபிள் சில நாட்களுக்கு முன்பு மதுஷின் மகனின் பிறந்தநாள் விருந்திலும் கலந்துகொண்டதாகவும், இவர் இதற்கு முன்பு கிராண்ட்பாஸ், மாலபே, ரனால மற்றும் மகரகம ஆகிய பகுதிகளில் தங்கியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.




இந்த உறவு குறித்து பொலிஸாருக்கு முன்னரே தகவல் கிடைத்ததையடுத்து, மகரகம பொலிஸில் கடமையாற்றிய குறித்த கான்ஸ்டபிள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த அதிகாரி தற்போது மகரகம பொலிஸாரின் தலையீட்டால் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மகரகம பிரதேசத்தைச் சேர்ந்த 23 முதல் 38 வயதுக்குட்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post